ஈரானில் கொரோனாவுக்கு இதுவரை 42 ஆயிரம் பேர் பலி?

ஈரானில் இதுவரை சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் பொருளாதாரத்தடைகளை சந்தித்து வரும் ஈரானில் மருத்துவ உள்கட்டமைப்பு போதிய வளர்ச்சி அடையவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அந்நாட்டு வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன.

அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிடும் வைரஸ் தொடர்பான விவரங்களில் கொரோனா பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஈரானில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசின் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் என பிபிசி செய்திநிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திடம் ஈரான் அரசின் கொரோனா வைரஸ் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கிடைத்துளது.

அந்த ஆவணங்களின் படி வைரஸ் பரவத்தொடங்கிய நாள் முதல் ஜூலை 20 வரை ஈரானில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதே நாள் கணக்கீட்டின் படி 2 லட்சத்து 78 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் வைரஸ் தாக்குதலுக்கு ஜுலை 20 கணக்கீட்டின் படி 14 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை மக்களிடம் தெரிவித்துள்ளது.

ஆனால் அரசின் ரகசிய ஆவணங்களில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அரசு மக்களிடம் தெரிவிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையை விட ரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 3
மடங்கு அதிகம் ஆகும்.

தேர்தல், அரசியல் குழப்பம், மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்திகொண்டு ஈரான் அரசு கொரோனா வைரஸ் தொடர்பான உண்மை தகவல்களை தெரிவிக்காமல் மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னதாக, கடந்த மாதம் ஈரானில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் ரவுகானி,’ நமது கணக்கீட்டின் படி தற்போது வரை 2 கோடியே 50 லட்சம் ஈரானியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வரும் மாதங்களில் இன்னும் கூடுதலாக 3 முதல் 3 1\2 கோடி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here