புக்கிட் கெப்போங் தாக்குதல்

23.2.1950… அதிகாலை 5.30 மணி…

அன்றைய மலாயாவின் மிக முக்கியமான காவல் நிலையமாக கருதப்பட்டு வந்த ‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது…

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மலாயாவில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது!  கம்யூனிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்  மலாயாவை ஆண்ட பிரிட்டிஷ்  அரசாங்கம் முழு  மூச்சுடன் ஈடுபட்டு வந்த நேரம்.

பிரிட்டிசாரை மலாயா மண்ணில் பிறந்தவர்கள் எதிர்த்தனர். பிரிட்டிசாரை எதிர்க்கும் வகையில்தான் கம்யூனிஸ்ட் படையும் களம் அமைக்கப்படுகிறது.

காடுகளில் மறைந்து வாழ்ந்த நிலையில் அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வருகின்றனர்.

எனினும், மலாயா மக்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்காமல் போகிறது.

சீன அரசாங்கம் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் காரணமாகவும் மலாயா வருங்காலத்தில் சீனா வசமோ அல்லது ரஷ்யா வசமோ சென்று கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கி மலாய்க்காரர்களின் ஆட்சி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவும் கம்யூனிஸ்டு ஆதரவு என்பது மரண பயம் வரும்போதெல்லாம் மட்டுமே வெளிப்படும் மாயநிலவாகவே இருக்கிறது.   

ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளின் வழியைப் பின்பற்றிய மலாயாக்காரர்களில் ஒரு பிரிவினர் பிரிட்டிசாரை எதிர்க்க மூர்க்க சிந்தனையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.  

காடுகளில் தங்கியிருந்து கிராமங்களையும் போலீஸ் நிலையங்களையும் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிகப் பெரிய தாக்குதல் 23.2.1950 அன்று அதிகாலை 5.30 மணிக்கு ‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையம் மீது தொடுக்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தின் கோல கிராவ் காவல் நிலையத்திலும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதிகமான உயிர்களை பலிகொண்ட தாக்குதல் என்பதால் ‘புக்கிட் கெப்போங்’ வரலாற்றில் முந்திக் கொள்கிறது.

பெருவாரியான சாலை வசதி இல்லாத காலம் என்பதால் மூவார் ஆற்றை நம்பியே அப்போதைய பொதுபோக்குவரத்து அமைந்திருந்தது.

மூவார் ஆற்றில் பயணம் செய்து நெகிரி செம்பிலானின் பகாவ் பட்டணம் வரை சென்று விட்டால் அங்கிருந்து செர்த்திங் ஆற்றை அடைந்து விடலாம்.

செர்த்திங் ஆற்றின் வழியே பயணம் செய்து பகாங் ஆற்றை அடைந்து விட முடியும்.

பகாங் ஆற்றில் பயணம் செய்தால் பிரபலமான துறைமுகமாக விளங்கிய ‘பெக்கான்’ பட்டினத்தையும் அடைந்து விடலாம்.

ஆதிகால நீர்வழி தொடர்பு காரணமாகத்தான் ‘பகாங்’ எனவும் ‘பகாவ்’ எனவும் மாநிலத்திற்கும் நகரத்திற்குமான பெயர் ஒற்றுமையும் ஏற்பட்டது.  

தீபகற்ப மலேசியாவை அதன் மேற்குக்கரையிலிருந்து கிழக்குக் கரை வரை இணைக்கும் மிக முக்கிய பாதையாக நதிவழிப் பாதை அமைந்திருந்தது.

கார்கள் அதிகம் இல்லாத காலத்தில் படகுகளும் சிறிய ரக கப்பல்களும் ஆறுகளை மட்டுமே நம்பியிருந்தன.

தீபகற்ப மலேசியாவை சுற்றிச் செல்லாமல் நீர்வழி குறுக்கே பயணித்து சீனாவின் பண்டமாற்று வியாபாரம் பெக்கான் நகருக்கும் மூவார் நகருக்குமாக நடத்தப்பட்டு வந்த காலம் அது.

இதன் காரணமாக மூவார் ஆறு அப்போது செல்வாக்கு மிக்க நீர்நிலை போக்குவரத்தாக விளங்கி வந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் பயணம் செய்கிறார்கள் என்பதையும் மேற்கத்திய நாடுகள் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கான பண்டமாற்றுக்கு முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது என்பதாலும் இந்த நீர்வழிப் பாதையில் காவல் நிலையங்களும் அதிகமாக அமைக்கப்பட்டிருந்தன.  

அப்படி அமைக்கப்பட்ட ஒரு காவல் நிலையம்தான் மூவார் பட்டணத்திலிருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையம்.

‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையத்திற்கு என்று தனி செல்வாக்கு இருப்பதை விரும்பாத கம்யூனிஸ்டுகள் அதனை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கம்யூனிச போராட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்ட ஒரு உதாரணப் பொட்டு வைக்கவும் அவர்கள் விரும்பினர்.  

சுமார் இருபது வீடுகள் மற்றும் கடைகளைக் கொண்ட ஒரு சிறிய தொலைதூர கிராமமான மூவார் ஆற்றின் வளைவில் உள்ள ‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையத்தை அவர்கள் குறிவைத்து அருகில் உள்ள ரப்பர் காடுகளில் பதுங்கிக் கொள்கின்றனர்.  

இந்த காவல் நிலையம் 1950களின் முற்பகுதியில் அங்குள்ள கம்யூனிச இயக்கத்தின் மையமாக விளங்கி வந்தது.

பின்னர் அது பிரிட்டிசாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையமாக மறுவடிவமைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் மறக்கவில்லை.

 விட்டதை மீட்கும் ஆர்வம் அவர்களுக்கு!

அந்த நேரத்தில், மூன்று சிறப்பு போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் நான்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகள் ஆற்று நடமாட்டத்தைக் கவனிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டு 22 காவல் வீரர்களுடன் ‘புக்கிட் கெப்போங்’ காவல் நிலையம் இயங்கி வந்தது.

உறுப்பினர்களின் பதின்மூன்று மனைவிகளும் குழந்தைகளும் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.  

இந்நிலையில்தான் அதிகாலை  5.30 மணியளவில் தாக்குதல்  தொடங்கியது.  

ஜாபர்  ஹசானின் உளவாளி மண்டபத்தின் முள்வேலியை கம்யூனிச பயங்கரவாதி ஒருவன் வெட்டிக் கொண்டிருக்கிறான்.

கவனித்து விட்ட ஜாபர் ஹசான் பயங்கரவாதியை எதிர்த்து  அவனைச் சுட்டுக் கொள்கிறான். 

போருக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது!!!  

கம்யூனிஸ்டுகள் எல்லா கோணங்களிலிருந்தும் தாக்குகின்றனர். இந்த தாக்குதல் காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் என்றுதான் அவர்கள் தீர்க்கமாக நம்பினர்.

ஆனால் காவல்துறையினரின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.   சரணடையுமாறு கம்யூனிஸ்டுகள் பலமுறை அழைப்பு விடுத்த போதிலும் வீரர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.  

போர் தொடர்ந்தபோது காவல் துறை வீரர் ஒருவர் குண்டடிபட்டு வீழ்கிறார். 

இருதரப்புக்கும்  நேர்ந்த துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலுமே உயிர்ச்சேதங்கள்… 

காவல் துறை வீரர்களான தங்கள் கணவன்மார்கள்  கொல்லப்பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த மனைவியர் இருவர்  ஆயுதங்களை கைகளில் ஏந்துகின்றனர்.

கம்யூனிஸ்டுகளை அவர்கள் எதிர்க்கின்றனர்.

கண்மண் தெரியாதபடி சுடுகின்றனர்.  இரண்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் தலை சாய்கின்றனர்.

அதிகாலை 5.45 மணியளவில், துணை போலீஸ் குழு ஒன்று துப்பாக்கிகளுடன்  அருகிலுள்ள கம்போங் ஜாவாவிலிருந்து அதன் கிராமத்துத் தலைவர் அலி முஸ்தபா தலைமையில் அணிதிரட்டப்பட்டு உதவிக்கு விரைகிறது.   கம்யூனிஸ்டுகள் பலமான அரண் அமைத்திருந்ததால் அதனை ஊடுருவ முடியாத நிலையில் அனைவரும் ரப்பர் காட்டுக்குள் மறைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

காலை 7.00 மணியளவில், காவல் துறையின் ரகசியப் பிரிவு வீரர் ஜாபரின் மனைவி மரியம் இப்ராஹிமை கம்யூனிஸ்டுகள் பிடித்துக் கொள்கின்றனர்.  

​​காவல் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாத்திமா யாபா மற்றும் அவரது மகள் ஹாசனும் பிணை பிடிக்கப்பட்டு அவர்களை விடுவிக்க வேண்டுமானால் சரணடைய வேண்டிய கட்டாயத்திற்குள் காவல் துறையினர் தள்ளப்படுகின்றனர்.

என்றாலும், இன்னமும் அவர்கள் சரணடைய பிடிவாதம் பிடிக்கின்றனர்.  

இறுதி வரையில் கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். 

ஓய்வின்றிப் போகிறது போராட்டம்!

காவல் வீரர்கள் சரணடைய மறுத்ததால் ​​மரியம் காயப்படுத்தப்படுகிறார். 

பாத்திமா கொல்லப்படுகிறார்.

மூவார்  ஆற்றில் படகு ஓட்டுநராக பணிபுரிந்து வந்த பாத்திமாவின் கணவர் மாதா அபுபக்கர்  கம்யூனிஸ்டுகள் கண்களில் படாமல் படகில் அமர்ந்திருக்கிறார்.

அவரையும் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்கின்றனர்.

காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்றவர்களை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே வருகின்றனர்.

மேற்கில் உள்ள டுரியன் சொண்டோங் கிராமத்தில் வசிப்பவர்கள் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க ‘லெங்கா’  என்ற கிராமத்திற்கு ஒரு படகை அனுப்பி வைக்கின்றனர்.

படகோட்டி திரும்பி வருவதற்குள் எல்லாமே முடிந்து போகிறது.

போரின் இறுதித் தருணத்தில் கம்யூனிஸ்டுகள் காவல் நிலையத்திற்கு தீ வைக்கின்றனர்.

அருகில் இருந்த கடைகளும் எரிக்கப்பட்டு சாம்பலாகிறது. ஐந்து மணி நேரம் தொடர்ந்த சண்டைக்குப் பிறகு எஞ்சிய கம்யூனிஸ்டுகள் காட்டுக்குள் தப்பிச் செல்கின்றனர். 

மூர்க்கமாக நடைபெறும்   போரில் 19 காவல் வீரர்களும் 40 கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கொல்லப்படுகின்றனர்.

மலாயாவை உலுக்கிய இச்சம்பவம் 1981ஆம் ஆண்டு மலாய் மொழியில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்தது.  

மேற்கே தங்காக், புக்கிட் கம்பீர், கெரிசெக், பாகோ, மூவார் ஆகிய ஊர்களும் வடக்கே சிகாமட் நகரும் கிழக்கே லாபீஸ், ச்சாஆ ஆகிய ஊர்களும் இருக்க நடுவில் இன்னமும் காட்சிக் கூடத்துடன் அமைந்திருக்கிறது புக்கிட் கெப்போங் காவல் நிலையம்.

கோலாலம்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது தங்கா வட்டத்தில் இறங்கி அங்கிருந்து கிழக்காக பயணம் செய்து கெபுன் பாரு கிராமத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாக வலமாகத் திரும்பி சுமார் அரை மணி நேரம் வரை பயணித்தால் புக்கிட் கெப்போங் காட்சிக் கூடத்தை அடைந்து விடலாம். 

ஊருக்காக உதிரம் சிந்தியவர்களின் உன்னத வரலாற்றைச் சொல்வதற்காக கண்காட்சிக்  கூடம் அங்கே காத்துக்  கிடக்கிறது!  

-மு.ஆர்.பாலு 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here