திரும்பிப் பார்க்கிறோம்

 

ராணி சந்திரா

 

‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலியானார். அவருடைய தாயாரும், 3 தங்கைகளும் இதே விபத்தில் மாண்டனர்.

ராணி சந்திராவுக்கு வயது 22. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965-ம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உள்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார்.

சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெறவேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.

எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976-ல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார்.

எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தம் ஆனார்.

கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார்.

படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி.

இந்த சமயத்தில் விதி விளையாடியது.

துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாய் நாட்டுக்கு ராணி சந்திரா சென்றார். அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி(13) ஆகியோரும் சென்றார்கள்.

கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

11-10-1976 நள்ளிரவு 1-40 மணிக்கு (அதாவது 12-ந்தேதி அதிகாலை) விமானம்

புறப்பட்டது.

புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து, விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது.

விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்து போனார்கள். ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே.கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ்.மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் பலியானார்கள்.

இதே விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் கட்சி தலைவருமான பொன்னப்ப நாடாரும் (வயது 53) பலியானார்.

இவர், 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன.

உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உடல்கள், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார்.

கதையை மாற்ற முடியாது.

ராணி சந்திரா சம்பந்தப் பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில், ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பார்களா என்று அலசிப் பார்த்தார்.

இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார்.

அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார், திருலோகசந்தர்.

டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் 10-12-1976 அன்று வெளியானது.

பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப்படம் சரியாக ஓடாது.

இதற்கு, முன் உதாரணங்கள் பல உண்டு.

ஆனால், ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது.

அதில், அசல் பிராமணப்பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா…’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான -திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.

கேரளாவைச் சேர்ந்த ராணி சந்திரா விமான விபத்தில் இறந்த சம்பவத்திற்கு அடுத்த 4 ஆண்டுகளில் மற்றொரு கேரள நடிகரான சூப்பர் ஸ்டார்  ஜெயன் ‘கொலிலாக்கம்’ என்ற மலையாளப் படப்பிடிப்பிடிப்பின்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்து போனார்.

மீண்டும் சந்திக்கும்போது இது குறித்து  விரிவாகப் பேசுவோம்.

மு.ஆர்.பாலு

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here