நடிகர் சுஷாந்த் சிங் மரணம்- சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) மும்பையில் உள்ள குடியிருப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகார் அரசும் விசாரணை நடத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா மாநில அரசும் விசாரணை மேற்கொண்டது.

ஒருகட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பரிந்துரை செய்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் செய்தார். மேலும் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கப் பிரிவு முன்பும் ரியா விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில் தன் மீது பீகார் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கு விவரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here