டாக்டர்களுக்கு தொடர் மிரட்டல்

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் அவரது ரசிர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கிற்கு பிரேத பரிசோதனை செய்த மும்பை கூப்பர் ஆஸ்பத்திரியை சேர்ந்த 5 டாக்டர்களுக்கு தொடர்ந்து போன் மூலமாக மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மருத்துவ சங்கத்தின் சட்டப்பிரிவு தலைவர் டாக்டர் சைலேஷ் மொகிதே கூறியதாவது:-

சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்ட 5 டாக்டர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் அழைப்புகள் வருகின்றன. இதுகுறித்த தகவலை கூப்பர் ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பினாகின் குஜ்ஜர் எங்களுக்கு தெரிவித்துள்ளார். டாக்டர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதாக செய்திகள் பரப்பப்படுகிறது.

ஆஸ்பத்திரியின் தரைவழி இணைப்பு போனுக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. இவ்வாறு மோசமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் இந்த டாக்டர்களின் தனிப்பட்ட குடும்ப விவரங்களையும் வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதனால் டாக்டர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் குறிவைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here