(கோகி கருணாநிதி)
இஸ்கந்தர் புத்ரி:
ஜோகூரில் 2,006 மலிவு விலை வீடுகள் அமைக்கும் இஸ்கந்தர் புத்ரி பங்சா ஜோகூர் வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜோகூர் மாநில வீடமைப்பு,ஊராட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜாஃப்னி ஷூகோர் தெரிவித்தார்.
இஸ்கந்தர் புத்ரியில் உள்ள கெர்பாங் நூசாஜெயா திட்டப் பகுதியை நேற்று முந்தினம் பார்வையிட்ட அவர், மாநிலத்தின் மிகப்பெரிய ஜோகூர் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்றார்.
இந்தத் திட்டத்தின் மூலம் 2,006 குடும்பங்கள் சொந்த வீடு பெறவுள்ள நிலையில், ஒவ்வொரு வீடும் தரமானதாக, பாதுகாப்பானதாக, காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தில் 1,000 சதுர அடி பரப்பளவிலான வகை C மலிவு விலை வீடு RM150,000-க்கும், 1,100 சதுர அடி கொண்ட வகை D1 வீடு RM250,000-க்கும், 1,200 சதுர அடி கொண்ட வகை D2 வீடு RM300,000-க்கும் வழங்கப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூலை 15 நிலவரப்படி, முதல் கட்டம், 1A கட்டம் 96.34 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்டம் 75.02 விழுக்காடு முன்னேற்றம் கண்டுள்ளது. மூன்றாம் கட்டம், 3A கட்டம் தலா 15 விழுக்காடு முன்னேற்றத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்டப் பணியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், எழும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் டத்தோ ஜாஃப்னி வலியுறுத்தினார்.
வடிகால் வசதி, தொலைத்தொடர்பு வசதிகள், பசுமைப் பகுதிகள், திறந்தவெளி இடங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். வீடுகள் மட்டுமின்றி பாதுகாப்பான, ஒழுங்கான, வசதியான குடியிருப்புச் சூழலை உருவாக்குவதும் மாநில அரசின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை ஜோகூர் முழுவதும் 22,284 மலிவு விலை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுச் சான்றிதழ் (CCC) பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசியின் தலைமையில், அதிகமான ஜோகூர் மக்கள் சொந்த வீடு பெறும் வகையில் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் டத்தோ ஜாஃப்னி கூறினார்.





















