தலையில் கல்லை போட்டு மனைவி-மகன் படுகொலை

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கொத்தனார். இவருடைய மனைவி ராதிகா (36). கட்டிட தொழிலாளி. இவர்களின் மகன்கள் ரோகித் (13), கீர்த்திவாசன் (9). இதில் ரோகித் 9-ம் வகுப்பும், கீர்த்திவாசன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ராதிகாவின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் மாரியப்பன் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். உடனே ராதிகா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிடுவதும், பின்னர் சில நாட்களில் சோமரசம்பேட்டைக்கு வந்துவிடுவதும் வழக்கம்.

இந்தநிலையில் ராதிகாவுக்கும் சோமரசம்பேட்டை நாச்சிகுறிச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் (44) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுபற்றி பரமசிவத்தின் மனைவி ஜீவாவுக்கு தெரியவரவே அவர், கடந்த 17-ந்தேதி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ராதிகாவையும், பரமசிவத்தையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இருவரும் இனி சந்தித்து பேசக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். இதை அறிந்த மாரியப்பன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் ராதிகா, செல்போன் மூலம் பரமசிவத்துடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் ராதிகா வழக்கம்போல் பரமசிவத்துடன் பேசியதாக தெரிகிறது. இதனால் ராதிகாவுக்கும், மாரியப்பனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவில் ராதிகா தனது இளைய மகன் கீர்த்திவாசனுடன் வீட்டு வாசலில் பாய்விரித்து படுத்து தூங்க சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மனைவியின் நடத்தையால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி ராதிகா மற்றும் மகன் கீர்த்திவாசன் ஆகியோரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தனது மூத்த மகன் ரோகித்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

நேற்று காலை வீட்டின் வாசலில் ராதிகாவும், கீர்த்திவாசனும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் தாய், மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி-மகனை கொலை செய்துவிட்டு, மற்றொரு மகனுடன் தலைமறைவான மாரியப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here