மத்திய பிரதேசத்தின் திகம்கார்க் மாவட்டம் கார்காபூரை சேர்ந்தவர் தர்மதாஸ் சோனி (வயது 62). மாநில அரசின் கால்நடைத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பூணா (55) என்ற மனைவியும், மனோகர் (27) என்ற மகனும் இருந்தனர். மனோகருக்கு திருமணமாகி சோனம் (25) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.
அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாக தர்மதாசின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு அறையில் தர்மதாஸ், அவரது மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தனர். மற்றொரு அறையில் மனோகர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தர்மதாஸ் சமீபத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்று பணம் வைத்துள்ளார்.
தான் ஒரு கடையை வாங்க இருப்பதால் பணத்தை மனோகர் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு தர்மதாஸ் மறுத்து விட்டார். இந்த சூழ்நிலையில் 5 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். பணத்தகராறில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.