2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை

ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2019-20-ம் நிதியாண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் 2,000 ரூபாய் நோட்டுகளின் அச்சடிப்பு மற்றும் புழக்கம் தொடர்ந்து சரிந்து வருவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2019-20-ம் ஆண்டில் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. அதேநேரம் 27,398 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன. இதுவும் முந்தைய ஆண்டுகளை (2018 மார்ச் வரை 33,632 நோட்டுகள், 2019 மார்ச் வரை 32,910 நோட்டுகள்) ஒப்பிடும்போது குறைவாகும்.

மேலும் புழக்கத்தில் விட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் 3 சதவீதம் (2019), 3.3 சதவீதம் (2018) என்ற வகையில் இருந்துள்ளது.

அதேநேரம் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் அச்சிடுதல் மற்றும் வினியோக எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. 1,463 கோடி 500 ரூபாய் நோட்டுகளுக்கு அச்சிடும் ஆர்டர் வழங்கப்பட்டு 1,200 கோடி நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டில் 1,169 கோடி நோட்டுகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு 1,147 கோடி நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.

இதைப்போல 100 ரூபாய் நோட்டுகள் (330 கோடி எண்ணம்), 50 ரூபாய் நோட்டுகள் (240 கோடி எண்ணம்), 200 ரூபாய் நோட்டுகள் (205 கோடி எண்ணம்), 10 ரூபாய் நோட்டுகள் (147 கோடி எண்ணம்), 20 ரூபாய் நோட்டுகள் (125 கோடி எண்ணம்) 2019-20-ம் ஆண்டில் அச்சிடப்பட்டு உள்ளன. இவற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் வினியோகமும் செய்யப்பட்டு இருக்கின்றன.

கொரோனா தொற்றின் பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதல் மற்றும் புழக்கத்தில் விடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க கள்ள நோட்டுகளின் புழக்கம் இந்த ஆண்டில் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட முறையே 144.6 சதவீதம், 28.7 சதவீதம், 151.2 சதவீதம், 37.5 சதவீதம் அதிகரித்து இருக்கின்றன. அதேநேரம் ரூ.20, ரூ.100, ரூ.2,000 கள்ள நோட்டுகள் முறையே 37.7 சதவீதம், 23.7 சதவீதம், 22.1 சதவீதம் என குறைந்திருக்கின்றன.

மொத்தத்தில் 2 கோடியே 96 லட்சத்து 695 கள்ள நோட்டுகள் இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வங்கித்துறையில் சிக்கிய கள்ள நோட்டுகளில் 4.6 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீத நோட்டுகள் பிற வங்கிகளிலும் சிக்கியுள்ளன.

மேற்கண்ட தகவல் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here