சாதனையை விட கோப்பையை வெல்வதே முக்கியம் – பிராவோ சொல்கிறார்

கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விக்கெட்டையும் சேர்த்து ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் பிராவோவின் விக்கெட் எண்ணிக்கை 501 ஆக (459 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இலங்கையின் மலிங்கா (390 விக்கெட்) 2-வது இடத்தில் உள்ளார்.

பின்னர் 36 வயதான பிராவோ கூறுகையில், ‘எந்த ஒரு தொடரில் விளையாடினாலும் விக்கெட் எடுப்பதை தவிர கோப்பையை வெல்லும் போதே மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைகிறேன். என்னை பொறுத்தவரை இது போன்ற தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பையை வெல்வதே முக்கியமானது. நான், பொல்லார்ட், ரஸ்செல் ஆகியோர் இணைந்து உலகம் முழுவதும் அதிகமான 20 ஓவர் போட்டித் தொடர்களை வென்று இருப்பதாக நினைக்கிறேன். அதற்காகத்தான் நாங்கள் விளையாடுகிறோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here