காட்டிற்குச் சென்றால் அமைதி கிட்டுமா? ஆச்சார்யாள் அருளமுதம்!

துவாபரயுகத்தில் மாளவ நாட்டை சிகித்வஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். பெரும் பண்டிதனாக திகழ்ந்த அரசன் தாராள மனப்பான்மை கருணை வீரம் போன்ற நற்குணங்களின் இருப்பிடமாக விளங்கினார். சௌராஷ்ட்ர தேசத்து புத்திரியான சூடாலா என்பவளே சிகித்வஜனின் பட்டத்து ராணியானாள். முழு பதிவிரதையான அவள் தனது கணவனுக்கு ஏற்ற லட்சிய மனைவியாக திகழ்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களுடைய அன்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் இணைபிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். வருடங்கள் பல சென்றன. அவர்களுடைய இளமை மறைந்து முதுமை ஆட்கொண்டது. எல்லா இன்பங்களும் தற்காலிகமானவையே. துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்து நிரந்தரமான நிம்மதியை தரக்கூடிய பொருள் இவ்வுலகில் ஏதுமில்லை என்றும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த அத்தம்பதிகள் ஆத்ம ஞானம் மட்டுமே மிக பயங்கரமான சம்சாரத்தில் இருந்து பூரண விடுதலையை தங்களுக்கு தரவல்லது என்று முடிவு செய்தார்கள். எனவே அத்தகைய ஆத்ம ஞானத்தை அடைவதற்காக அவர்கள் தங்களால் இயன்ற அளவு பாடுபட்டார்கள்.

சூடாலா நன்கு கற்ற பண்டிதர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து உபநிஷத்துகளின் கருத்துக்களை தெரிந்து கொண்டாள். பிறகு தான் கேட்ட வேதாந்த தத்துவத்தை தனியே அமர்ந்து சிந்தித்தாள். நான் யார் இந்த உடல் ஒரு ஜடம். சைதன்யமாக விளங்கும் நான் ஜடமான தேகமாக இருக்க முடியாது. தேகத்தோடு சம்பந்தப்பட்டுள்ள இந்திரியங்களும் அதனைப் போலவே ஜடமாகும். ஏனெனில் ஒரு குச்சியைக் கொண்டு அடிப்பதால் எவ்வாறு கல் நகர்கிறதோ அவ்வாறே இந்திரியங்களும் மனம் சொல்லும் படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. அவற்றிற்கென்று தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் இல்லை. ஆகையால் நான் இந்திரிய கூட்டம் இல்லை. அடிப்படையில் மனமும் சைதன்யத்திலிருந்து வேறுபட்டு இருப்பதால் நான் மனமாய் இருக்கவும் முடியாது. மற்ற பொருட்களை போலவே மனமும் புத்தியினால் இழுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறே அகங்காரத்தினால் தூண்டப்படும் புத்தியும் நிச்சயம் ஜடமே. எனவே நான் புத்தியாகவும் இருக்கமுடியாது என்று தனக்குள் ஆலோசனை செய்தாள். இவ்வாறு அடிக்கடி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாள் தான் இரண்டற்ற சைதன்ய ஸ்வரூபமான பரப்பிரம்மமே என்று முடிவிற்கு வந்தாள் தனது இயற்கையான பிரம்மத்தில் மனதை ஒருமுகப்படுத்தி அவள் ஆத்ம ஞானத்தை வெகுவிரைவிலேயே அடைந்து பற்றற்ற நிலை எய்தினாள். சுகம் துக்கம் வெப்பம் குளிர்ச்சி போன்ற எதிர்மறை இருமை தன்மைகளால் அவள் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

சூடாலா மிகவும் பிரகாசமாக விளங்குவதை சிகித்வஜன் அறிந்து கொண்டான். அவன் தன் ராணியை பார்த்து உன் இளமையை மீண்டும் நீ அடைந்து விட்டதை போன்று மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாயே என்ன காரணம் என்று கேட்டான். அவள் உண்மையாகவும் இல்லாமல் முற்றிலும் இல்லை என்றும் சொல்ல முடியாத இந்த பிரபஞ்சத்தை நான் புறக்கணித்துவிட்டேன். இவ்வுலகத்தில் எதுவும் இல்லாமலேயே நான் திருப்தியுடன் இருக்கிறேன். நான் சந்தோஷப்படுவதுமில்லை வெறுப்பு அடைவதும் இல்லை எல்லையற்ற பூரணமான என் ஆத்மாவில் நான் ரமித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் நான் பிரகாசமாக காணப்படுகிறேன். என்று கூறினாள். அரசன் அவளுடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. அவளை நோக்கி நீ ஒரு குழந்தையைப் போல பிதற்றுகிறாய் எல்லா ராஜபோகங்களுக்கும் நடுவில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அங்ஙனம் இருக்கையில் எல்லா உலக இன்பங்களையும் துறந்து விட்டேன் என்று எப்படி உன்னால் சொல்ல முடியும். குழப்பத்தில் மூழ்கி இருக்கிறாய் அழகுராணியே நீ வார்த்தைகளினால் ஏதோ ஜாலம் செய்து கொண்டிருக்கிறாய். நன்றாக அனுபவித்துக் கொண்டிரு என்று கூறி சிரித்தான். பிறகு பிற்பகலில் நீராடுவதற்கான நேரம் நெருங்கவே அங்கிருந்து சென்று விட்டான்.

ஆத்ம ஞானத்தைப் பற்றி தான் கூறும் அறிவுரைகள் அரசன் செவி சாய்க்க மாட்டான் என்பதை சூடாலா அறிந்து கொண்டாள். அரசனைப் பற்றி நினைத்து வருத்தப்பட்டாள். அவள் எல்லா ஆசைகளையும் கடந்திருந்த போதிலும் ஒருநாள் யோக சக்திகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தற்செயலாக ஏற்பட்டது. அதற்கு வேண்டிய கட்டுப்பாடுகள் எல்லாம் கடைபிடித்து வந்த அவள் பிராணாயாமம் தியானம் ஆகியவற்றை பழகி வந்தாள். தனது குண்டலினி சக்தியை எழுப்பினாள். தனது உருவத்தை சிறியதாகி கொள்வது அல்லது பெரியதாக்கி கொள்வது போன்ற எல்லா வகையான சித்திகளையும் அவள் அடைந்தாள்.

ஆன்மீக சாதகர்கள் இத்தகைய யோக ஸித்திகளினால் மதி மயங்கி விடக்கூடாது. மாறாக அவற்றை தனது யோக மார்க்கத்தில் ஏற்பட்ட இடையூறாகவே கருதவேண்டும். சூடாலா ஏற்கனவே ஆத்ம ஞானத்தை அடைந்திருந்ததால் அத்தகையை யோக சித்திகளை அடைவதாலும் இழப்பதாலும் அல்லது அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. அச்சக்திகளை அவள் அடைவதன் மூலம் அவை நன்கு நிலைபெற்றிருக்கும் பரமார்த்த நிலையிலிருந்து அவளை வழுவச் செய்துவிடும் என்றும் கூறுவதற்கு இல்லை.

அஞ்ஞானம் எனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அரசனை எழுப்புவதற்காக அவள் எவ்வளவு முயன்ற போதிலும் தனது இதயம் கவர்ந்த ராணியாகவும் ஞானமடையா மனைவியாகவும் தான் அவனால் அவளை பார்க்க முடிந்தது. அதனால் அவளுடைய வார்த்தைகளை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசன் நிறைய தானங்கள் செய்தான்ல. தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளையும் உபவாசத்தையும் கடைபிடிக்க வேண்டிய பல விரதங்களையும் அனுஷ்டித்தான். இருப்பினும் அவன் தொடர்ந்து அஞ்ஞானியாகவே இருந்தான். உண்மையை உணராதால் தனக்கு நேர்ந்த கஷ்டங்களைக் கண்டு அரசன் மன அமைதியை இழந்தான். தனது கடமைகளும் சுகபோகங்களும் அதிகாரங்களும் தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெரிதும் இடையூறாக இருப்பதை உணர்ந்த அரசன் அவற்றைத் துறந்து விட முடிவெடுத்தான். தனிமையில் சூடாலாவை சந்தித்த அரசன் தான் நாட்டை நீண்டகாலம் ஆண்டு விட்டேன் பலதரப்பட்ட சுகபோகங்களையும் அனுபவித்து விட்டேன். இப்போது என் மனதிலே ஒரு விரக்தி ஏற்பட்டு வைராக்கியமும் உண்டாகி உள்ளது. எல்லா ராஜபோகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்று எளிமையான தவ வாழ்க்கையை வாழவே என் மனம் விரும்புகிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்டு காட்டில் வாழும் ஒருவனை சுகங்களோ துயரங்களோ வளமோ தாழ்வோ எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா கவலைகளில் இருந்தும் விடுபட்டு காட்டில் தனியாக வசித்துக் கொண்டு நான் சந்தோஷமாக இருக்க போகிறேன்.

நான் கடைபிடித்து வந்த தர்மநெறிகளிலிருந்து வழுவாமல் நீ இராஜ்ஜியத்தை ஆண்டு வா என தன் எண்ணத்தை அவளுக்கு தெரியப்படுத்தினான். சூடாலா அதற்கான தகுந்த சமயம் அதுவல்ல என்று கணவனுக்கு எடுத்துரைத்தாள். ஆனால் அரசன் தனது முடிவில் உறுதியாக இருந்தான். அந்த இரவில் சூடாலா கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அரசன் மெல்ல எழுந்து அவளை விட்டுப் பிரிந்து சென்றான். தனது மெய்க்காப்பாளர்களிடம் தான் தனியே நகர்வலம் செல்வதாகக் கூறினான்.

நீண்ட தூரம் பயணம் செய்து அடர்ந்த காட்டை அடைந்தான். அங்கு ஒரு பர்ணசாலையை அமைத்துக்கொண்டு பூஜைகளிலும், ஜபத்திலும் காலத்தை கழித்து வந்தான். தனது யோக சக்தியால் அரசன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாள் சூடாலா. ஆனால் அரசனுக்கு உதவி புரிவதற்காக காலம் இன்னும் கனியவில்லை என்று நினைத்து அவள் தன் ராஜாங்க காரியங்களில் மனதைச் செலுத்தினாள். அவள் எதிர்பார்த்த தகுந்த சமயம் வந்தது ராணியாக அரசனிடம் சென்றால் தான் கூறும் புத்திமதிகளை அரசன் பொருட்படுத்த மாட்டான் என்பதை அறிந்த அவள் தனது தவவலிமையால் தேஜஸ்ஸுடன் விளங்கும் அந்தணச் சிறுவனாக தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அரசன் முன்பு நின்றாள். அந்தணச் சிறுவனை கண்டதும் எழுந்து நின்று தனது மரியாதையை தெரியப்படுத்தினார் அரசன். தன் பெயர் கும்ப என்றும் தேவலோகத்து ரிஷியான நாரதரின் புதல்வன் என்றும் அரசனிடம் தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவளுடைய தெய்வீகத் தன்மையும் கனிவான பேச்சும் அவனை மிகவும் கவர்ந்தன. ஆத்ம ஞானம் அடைய வேண்டுமானால் ஒருவன் துறக்க வேண்டும் என்று அவனுக்கு உபதேசித்தாள்‌ அதற்கு அரசன் தனது ராஜ்யத்தையும் அரண்மனை வாழ்க்கையையும் செல்வத்தையும் மற்றும் மிகவும் நேசித்த தனது மனைவியையும் துறந்து விட்டதாக கூறினான். இதற்கு மேல் நான் துறப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டான். சிறுவனின் வடிவில் இருந்த அரசனின் மனைவி, இராஜ்ஜியம் போன்றவற்றை துறப்பதால் அனைத்தையும் துறந்து ஆகாது. இன்னும் உங்களுக்கு பற்றுதல் இருக்கிறது என்று பதிலுரைத்தாள் அதை கேட்ட அரசன் எனக்கு இந்தப் காட்டின் மீது மட்டும்தான் பற்றுதல் இருக்கிறது அதையும் விட்டு விடப் போகிறேன் என்று கூறினான். நான் இப்பொழுது அனைத்தையும் துறந்து விட்டேன் என்று குறிப்பிட்டான். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த சூடாலா மரங்கள் நீரோடைகள் மலைகள் ஆகியவற்றின் மேல் இருக்கும் அபிமானத்தையும் தாங்கள் விலகி விட்ட போதிலும் எல்லாவற்றையும் துறந்தது ஆகாது என்று கூறினாள். உடனே அரசன் தன்னுடைய பாத்திரங்களையும் வசித்துவந்த பர்ணசாலையில் துறந்தான். இதற்கும் திருப்தி அடையாத அவள் மீண்டும் ஆட்சேபணை தெரிவித்தாள். சிகித்வஜன் தனது மான் தோலையும் ருத்ராக்ஷ மாலையும் திருவோடு முதலியவைகளையும் துறந்துவிட்டு நிர்வாணமாக நின்றான். அப்பொழுதும் இன்னும் துறக்கவில்லை என்று சொல்லத் தொடங்கினாள். என்ன இருக்கிறது தேகத்தை திறந்தால் தான் துறவில் முழுமை அடையும் என்றால் தற்கொலை செய்து கொள்கிறேன் என அதற்கு முற்பட்டான். சூடாலா அரசனை தடுத்து நீங்கள் இவ்வுடலைத் துறந்தாலும் கூட உங்களுடைய துறவு முழுமையடையாது. மாறாக எல்லாப் பிறவிகளுக்கும் செயல்களுக்கும் விதையாக இருந்து கொண்டு இவ்வுடலைத் தூண்டிக் கொண்டிருப்பவனை துறந்தால் தான் நீங்கள் அனைத்தையும் துறந்ததாகும் என்று சொன்னாள். அரசன் அவள் கூறியதை தெளிவுபடுத்துமாறு அவளை கேட்டுக் கொண்டான். மனதை துறப்பது தான் முக்கியமானது என்று விளக்கினாள். மனமே அனைத்துமாய் மாறுபட்டிருக்கிறது. எல்லா சுபாகங்கள் அல்லது வாசனைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மனம் என்னும் விருஷத்திற்கு அகங்காரமே விதையாகும். ஒருவன் தனது ஆத்மாவின் இயற்கை தன்மையை விசாரணை செய்வதன் மூலமே உண்மையில் மனதின் மூலத்திற்கு நாசத்தை உண்டு பண்ண முடியும் என்று அழுத்திக் கூறினாள்.

அவளுடைய அறிவுரைகளை செயல்படுத்துவதில் வெற்றி கண்ட அரசன் ஆத்ம ஞானத்தை அடைந்தான். அவனை விட்டு பிரிந்து சென்று மீண்டும் அவனிடம் வந்து அவள், அவனை பல விதங்களில் சோதித்து பார்த்த போதிலும் அவன் எதுற்குமே மனம் தளராமல் இரண்டற்ற பரமாத்மாவில் நன்கு நிலைபெற்றிருந்தான்.

கும்பனின் மூலம் தான் சாதிக்க நினைத்ததை நிறைவேற்றிய திருப்தியில் தனது உண்மை ரூபத்தை அரசனுக்கு தெளிவு படுத்தினாள். பிறகு மீண்டும் இராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்ற அரசனை அவள் கேட்டு கொண்டாள். அவளுடைய ஆலோசனைப்படியே ராஜபதவியை ஒப்புக்கொண்டு எவ்வித பற்றுதலும் இன்றி உயர்விலும் தாழ்விலும் சிறிதளவும் பாதிக்கப்படாமல் ஆட்சி புரிந்து வந்தான். அரசனும் அரசியும் பரப்பிரம்மத்தில் நன்கு முழுமையாக நிலைபெற்றிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here