பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானி, கோத்தகிரியில் தங்கி இயற்கை முறையில் மூங்கில் வளர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரண்தீப் சிங்,58; அமெரிக்காவில் விமானியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றார். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், தனது மனைவியுடன், நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இருவரும் கோத்தகிரியில் நிரந்தரமாக தங்க முடிவெடுத்தனர். கோத்தகிரி ஆடதொறை பகுதியில், இவர்கள், ஏழு ஏக்கர் நிலம் வாங்கி, தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, வீடு கட்டி, கடந்த ஏழு ஆண்டு களாக வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் அரசு நர்சரியில் இருந்து, 100 ரூபாய்க்கு, 10 மூங்கில் நாற்று வாங்கி வந்து, வீட்டருகே நடவு செய்து, மூங்கில் சோலையாக மாற்றியுள்ளனர்.மூங்கில் ஒன்றுக்கு, 800 முதல், 1,000 ரூபாய் வரை விலை கிடைத்தாலும், விற்பனை செய்யாமல், வேலி அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். தேவைப்படுவோருக்கு, இலவசமாக மூங்கில் நாற்றுகளை வழங்கி வருகிறார்.
குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு மூங்கில் வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.சரண் தீப் சிங் கூறுகையில்,”நீலகிரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் விதமாக, இப்பகுதியில், இயற்கையை நேசிக்கும் நபர்களை தேர்வு செய்து, அவர்கள் சொந்த செலவில் வீடு கட்டுவதற்கு ஏதுவாக, முதல் கட்டமாக, 10 பேருக்கு, தலா மூன்று சென்ட் வீதம் நிலத்தை, இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்,” என்றார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு’சுற்றுச்சூழலுக்கு எதிராக, விவசாய நிலத்தை அழிப்பது, வன விலங்குகளுக்கு இடையூறாக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பது, மரம் வெட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் சன்மானம் தரப்படும்’ என, துண்டுப்பிரசுரங்களை, மக்களிடம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாத்து வருகிறார்.