உறவினர்களின் கட்-அவுட்டுகளை வைத்து திருமணம் செய்த ஜோடி

இங்கிலாந்தில் உறவினர்களின் கட்-அவுட்டுகளை வைத்து திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் உலகமே தலைகீழாக மாறிவிட்டது. கூட்டம் சேர்ந்து கொண்டாட்டம் என்ற நிலை காணாமல் போய்விட்டது. இதில் திருமண நிகழ்ச்சியும் ஒன்று. பெற்றோர், உறவினர் என அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் விழா, தற்போது யாரும் இல்லாமல் மணமக்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக மாறி விட்டது. ஆனால் படைப்பாற்றல் மிக்க சிலர், இந்த கொரோனா காலத்திலும் தங்கள் திருமண நிகழ்வை மறக்க முடியாத விழாவாக மாற்றுகின்றனர். அப்படிப்பட்டவர்கள்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோமானி மற்றும் சாம் ரொண்டியோ ஜோடி. கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இடையில் புகுந்தது.

இதனால் ஆகஸ்ட் 14-க்கு திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக திருமண விழாவில் கலந்து கொள்ள 14 விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்தில் தங்கள் அன்புக்குரிய உறவினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த தம்பதியினர் புதுமையான ஐடியா ஒன்றை செயல்படுத்தினர்.

உறவினர்கள் 48 பேரின் கட்-அவுட்களைச் தயார் செய்து அதனை திருமணம் நடைபெற்ற இடத்தைச் சுற்றி வைத்தனர். பின்னர் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த தருணம் மிக நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் முகநூலில் பதிவிடப்பட்டு, பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here