கூச்சிங்:
கடந்த மே 1-ஆம் தேதி சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை 19 வயது இளைஞர் ஒருவர் இன்று இங்குள்ள நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
எலிஜா ஜெரேமியா யோ ஷி சியான் (Elijah Jeremiah Yeo Shi Xian) என்ற அந்த இளைஞர், இன்று மாஜிஸ்திரேட் நுர்ஷாஹிகா நஸ்வா ரட்சாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த மே 1-ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில், ஜாலான் ஸ்டுடோங்கில் (Jalan Stutong) ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி, 56 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 50,000 மலேசிய ரிங்கிட் அபராதம் என்பன விதிக்கப்படலாம். மேலும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தடை மற்றும் தகுதியிழப்பு செய்யப்படும்.
இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை 20,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அனுமதித்ததுடன், வழக்கு நடவடிக்கைக்காக ஜூன் 5-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, விபத்து குறித்து தகவல் அளித்த கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு, அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.





















