திண்டுக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் கோவிலில் திண்டுக்கல் நகர் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் மீட்பு பிரிவு போலீசார் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து மர்ம நபர் ஒருவர் அவசர அழைப்புக்கான எண் 100-ல் தொடர்பு கொண்டு அபிராமி அம்மன் கோயில் முன்பு உள்ள பழக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப் போவதாகவும், திங்கள்கிழமை மாலைக்குள் அந்த கடையை காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபரின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் போதையில் பேசினார். அவரை பிடிப்பதற்காக திண்டுக்கல் நகர காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். எனினும் மர்ம நபரின் எச்சரிக்கையை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.