இந்தியாவின் பிரபலமான பொறியாளராக திகழ்ந்தவர் விசுவேசுவரய்யா

இந்தியாவின் பிரபலமான பொறியாளராக திகழ்ந்தவர் விசுவேசுவரய்யா. இவர் கடந்த 1860ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாச சாஸ்திரி ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கினார். விசுவேசுவரய்யாவின் 15வது வயதில், அவரது தந்தை காலாமானார். பெங்களூரு மற்றும் சென்னையில் விசுவேசுவரய்யா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் கட்டட பொறியியல் படிப்பை பயின்றார்.

இதையடுத்து பம்பாய் பொதுப் பணித்துறை பணியில் சேர்ந்து கொண்டார். பின்னர் இந்திய நீர் பாசன ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருடைய பொறியியல் திறமைகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்தன. 1903ஆம் ஆண்டு புனேவில் கடக்வசல நீர்த்தேக்கத்தில் தானியங்கி மதகை நிறுவினார்.

பின்னர் இதேபோன்ற மதகை குவாலியர், கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் அமைக்கப்பட்டது. ஐதராபாத் நகருக்கு வெள்ள பாதுகாப்பு முறைகள், விசாகப்பட்டின துறைமுகத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், காவிரி குறுக்கே கிருஷ்ண ராஜ சாகர் அணை ஆகியவை இவரது மிகப்பெரிய சாதனைகள் ஆகும்.

விசுவேசுவரய்யா செயல்பாடுகளை பாராட்டும் வகையில், நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா 1955ல் வழங்கப்பட்டது. விசுவேசுவரய்யாவிற்கு மரியாதை செய்யும் வகையில், இவரது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் நமக்கு தெரிந்த பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவுரப்படுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here