தம்பியை பழிவாங்க அண்ணன் கொலை

தம்பியை பழிவாங்க, அண்ணனை வெட்டிக் கொன்ற கும்பலை, 12 மணி நேரத்தில், போலீசார் கைது செய்தனர்.எண்ணுார், தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர், 29; பிரபல ரவுடியான இவர் மீது, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தவர் கடந்த வாரம் வெளியே வந்தார்.

கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் நகர் எதிரே, காலி மைதானத்தில், நண்பர்களுடன் மது அருந்த சென்ற போது, அங்கு, ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டனர்.மறைத்து வைத்திருந்த கத்தியால், அந்த கும்பல் ராஜசேகரை வெட்ட முயன்றது. உடன் வந்தவர்கள், தாழங்குப்பம் நோக்கி ஓட, ராஜசேகர் பக்கிங்ஹாம் கால்வாயில் இறங்கி ஓட முயற்சித்தார்.சேற்றில் சிக்கியவரை மடக்கிய கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியது.

இதில், ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.எண்ணுார் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.கொலையாளிகள் குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அத்திப்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த ஏழு பேரை, எண்ணுார் போலீசார், கொலை நடந்த, 12 மணிநேரத்திற்குள் பிடித்தனர்பிடிப்பட்டவர்கள், திருவொற்றியூரைச் சேர்ந்த புறா கார்த்திக், 23, எண்ணுாரைச் சேர்ந்த அப்துல் கரீம், 22, உள்ளிட்டோர் என, தெரியவந்தது.

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான டகுள் சுரேஷை, கடந்த ஆண்டு, குள்ளகார்த்திக், அவனது கூட்டாளிகள், வெட்டிக் கொலை செய்தனர். அவர், தற்போது சிறையில் உள்ளார்.குள்ளகார்த்திக்கை பழி வாங்க முடியாததால், அவரது அண்ணன் ராஜசேகரை, கொலை செய்ய, ஒரு வாரமாக திட்டம் தீட்டி, நேற்று முன்தினம் இரவு, தன் கூட்டாளிகளுடன் வெட்டிக் கொன்றதாக, டகுள் சுரேஷின் உறவினரான, புறா கார்த்திக் வாக்குமூலம் அளித்தார்.போலீசார், ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here