சூரரைப் போற்று படம் மிக நன்றாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இன்னமும் இயங்காமல் உள்ளதால், இயல்பு நிலைமை திரும்பிய பிறகு திரையரங்கில் வெளியாவதாக இருந்தது.
தற்போதைய சூழல் காரணமாக, சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார்.
அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படம் பற்றி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:
சூரரைப் போற்று படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என எண்ணுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை நான் பார்த்துவிட்டேன். இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தின் மூலம் கவனம் பெறுவார். படத்தில் உள்ள மூன்று அருமையான பாடல்கள் விரைவில் வெளியிடப்படும். பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.