ஜோகூர் சாலை விபத்தில் மணப்பெண் பலி, உடன்பிறந்தவர்கள் இருவர் காயம்

கோத்தா திங்கி:

ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் இன்று மதியம் பெரோடுவா மைவி மற்றும் லோரி மோதிய விபத்தில் திருமணம் செய்யவிருந்த மணப்பெண் ஒருவர் கொல்லப்பட்டார், அதேநேரம் அவரது இரண்டு சகோதரர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 22 வயதான சித்தி நபிலா ருடின் என்ற அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவரது 14 வயது சகோதரர் மற்றும் 22 வயது சகோதரி ஆகியோர் காயமடைந்தனர் என்று, கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் யூசோப் ஓத்மான் தெரிவித்தார்.

விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 4 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாகவும், இதில் பாதிக்கப்பட்ட பெண் ஓட்டிவந்த பெரோடுவா மைவி கார் முன்னால் இருந்த ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் சென்று லோரி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரும் அவரது உடன்பிறப்புகளும் கோத்தா மாசாயிலிருந்து கிளந்தானின் தனா மேராவுக்குப் பயணித்ததாகக் கூறப்படுகிறது என்றும், உயிரிழந்தவரின் சடலம் விசாரணைக்காக கோத்தா திங்கி மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

“காயமடைந்த அவரது சகோதரர்களும் மேலதிக சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here