மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
முன்னணி நடிகா்கள் பலரது உதட்டசைவுக்கு தனது பின்னணிக் குரலால் உயிா் கொடுத்த எஸ்பிபி, அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதை ஆக்கிரமித்த ஆகச் சிறந்த கலைஞன் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்தப் பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நேரில் அஞ்சலி செலுத்திய விஜய், பிறகு எஸ்.பி.பி. மகன் சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.