அமெரிக்காவில், வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ஆண்டுதோறும் கோடை காலத்தில், வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில், மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும், காட்டுத் தீ ஏற்படுகிறது.
இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.கலிபோர்னியா மாகாணத்தில், வனப் பகுதிகளில் ஆக., மாதத்தில் பரவ துவங்கிய காட்டுத் தீ, இம்மாதம் துவக்கம் வரை நீடித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெப்ப அலைகள் அதிகமாக இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த தீக்கு, 24 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. காட்டுத் தீ அணைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், வடக்கு கலிபோர்னியாவின் ஓயின் கன்ட்ரி பகுதியில், 27ம் தேதி முதல், மீண்டும் காட்டுத் தீ பரவத் துவங்கியுள்ளது.
தீ வேகமாக பரவி வருவதால், 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை, மூன்று பேர் பலியாகி விட்டனர். தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், கலிபோர்னியாவில், காட்டுத் தீக்கு, 29 பேர் பலியாகி விட்டனர். ஏழு ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன.