உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்யும் போது, குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண்ணை நான்கு பேர் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். அந்த நபர்கள், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், நாக்கையும் வெட்டியது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக உத்தரபிரதேசத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம் என குடும்பத்தினரும், பொது மக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்காமல், நேற்று இரவு 2:30 மணிக்கு காவல்துறையினரே இறுதிச் சடங்குகளை நடத்தியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடைசியாக ஒருமுறை கூட தங்கள் மகள் முகத்தை பார்க்கவில்லை என பெற்றோர் கண்கலங்க கூறியுள்ளனர். தங்கள் மத முறைப்படி இறுதிச்சடங்கு நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 3 பேர் கொண்ட இந்தக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here