சரவாக் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் தாமான் நெகாரா கூனோங் மூலு சரவாக்கும் அடங்கும். சரவாக் மாநிலத்தின் வட பகுதியில் இந்தச் சுற்றுலாத் தலம் அமைந்திருக்கின்றது.
மலேசியாவில் குறிப்பாக சரவாக்கில் அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவரும் தலம் இதுவாகும்.
உலக அளவில் நிபுணர்கள் ஆய்வு செய்யக்கூடிய சுண்ணாம்புக் குன்றும் இங்கு உள்ளது. சுமார் 52,864 ஹெக்டர் நிலப்பரப்பில் 17 மண்டலங்களில் பல வகையான தாவரங்களும் மரங்களும் செடிகொடிகளும் உள்ளன.
3,500 வகையைச் செர்ந்த செடிகள் இங்கு காணப்படுகின்றன. பல்வேறு வகையைச் செர்ந்த பனைமரங்களும் இங்கு இருப்பது தனிச் சிறப்பு. உலகின் மிக நீண்ட மலைத் தொடர்கள் தாமான் நெகாரா கூனோங் மூலுவில் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிலத்தடி இடமும் இங்கு உள்ளது. சரவாக் சேம்பர் என இதை அழைக்கின்றனர்.
இந்த நிலத்தடி நிலத்தில் 747 போயிங் ரகத்தை ச் சேர்ந்த 40 விமானங்களைத் தாராளமாக நிறுத்தி வைக்கலாம். உலகின் மிகப்பெரிய சுரங்கப் பாதையைக் கொண்ட குவா ரூசா மலையும் இங்கு உள்ளது.
இங்கு 2,377 மீட்டர் உயரம் கொண்ட மணல் கல் மலையும் உள்ளது. லட்சக்கணக்கான வௌவால்கள், லாயாங் லாயாங் பறவைகளின் புகலிடமாகவும் இந்தக் குகை உள்ளது.
தாமான் நெகாரா மூலா தனிச் சிறப்புமிக்க பூகோள வடிவமைப்பையும் கொண்டிருக்கிறது. சுண்ணாம்புக்கல் குகை, சுத்தமான கற்களைக் கொண்ட நீரோட்டம், வெப்ப மண்டலக் காடு ஆகியவற்றை இது உள்ளடக்கி இருக்கிறது.
பட்டணங்களில் பரபரப்பு வாழ்க்கைச் சூழலில் இருந்து விலகி அமைதியை விரும்புவோருக்கும் சாகசப் பயணத்தில் ஈடுபடுவோருக்கும் இது பொருத்தமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
மிரியில் இருந்து விமானம் மூலம் இங்கு சென்றடையலாம். அல்லது கோலா பாராம் மிரியில் இருந்து மருடி வரை விரைவுப் படகு மூலம் அந்தச் சுற்றுலாத் தலத்திற்குச் சொல்லலாம்.
இங்குள்ள டியர் கேவ் எனும் குகை 2 கிலோ மீட்டர் அகலத்தையும் 174 மீட்டர் உயரத்தையும் கொண்டிருக்கிறது. நிறைய உயிரினங்கள் இதில் வாழ்கின்றன.
12 வகையைச் சேர்ந்த வௌவால்களின் இருப்பிடமாவும் இது உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாலையும் 5.30 மணி தொடங்கி 6.30 மணிக்கு இடையே லட்சக்கணக்கான வௌவால்கள் அந்தக் குகையை விட்டு உணவைத் தேடி புறப்படும் காட்சியையும் காண முடிகிறது.
இங்கு வருவோருக்கு தங்கு வசதிகள் நிறைய உள்ளன. ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகின்றனர்.
நீங்கள் அங்கு சுற்றுலா செல்ல விரும்பினால் தங்கு விடுதிகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.