தற்கொலைக்கு தூண்டும் புகார்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்

‘தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்டவர் அந்த குற்றத்தை செய்வதற்கான மனநிலையில் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பர்னாலாவைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாய், கடந்த 1997ம் ஆண்டு கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து. இத்தீர்ப்பை பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தற்போது தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: எல்லா குற்றத்திலும் அதற்கான நோக்கம் நிரூபிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சட்டப்பிரிவு 107ன் கீழ், தற்கொலை செய்ய தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குற்றம்சாட்டப்பட்டவர் அந்த குற்றத்தை செய்வதற்கான மனநிலையில் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும். தற்கொலை செய்தவர்,  மற்றொருவரின் தூண்டுதலின் பேரால் அதை செய்ததாக நிரூபிக்கப்படுவது அவசியமாகும். மேலும், அந்த தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தார் என கூறப்படுபவர், குற்றங்கள் செய்யும் மனநிலையை கொண்டவர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

இந்த வழக்கில் 2 குழந்தைகளின் தாய், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எந்த மனநிலையில் அவர் தற்கொலை செய்தார் என்பதும் நிரூபிக்கப்படவில்லை. புகுந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு சாத்தியமான காரணங்கள், ஆதாரங்கள் இல்லாத சூழலில், புகுந்த வீட்டின் சூழ்நிலைகள்தான் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று ஊகிக்க முடியாது. எனவே, மனுதாரரின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here