ஊசி போட்டதால் கண்முன்னே துடிதுடித்து இறந்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா(50). ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பலனாக கடந்த 3 ஆம் தேதி சந்திரிகா கொரோனாவிவிருந்து குணமடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அவரை அழைத்துச்செல்ல அவரது மகன் அனீஷ் மருத்துவமனை வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் வீடு திரும்புவதற்கு முன்னதாக நேற்று செவிலியர் ஊசி போட்டுள்ளார். பின்னர் அடுத்த சில விநாடிகளிலேயே சந்திரிகா துடிதுடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. தாய் அழைத்து செல்ல வந்த மகன் கண்முன்னே தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணீர் மல்க அனீஷ் செவிலியரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, இப்படி சாவுறது எல்லாம் இங்கே சகஜம்தான் என்று அந்த செவிலியர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் தாய் மரணத்துக்கு செவிலியரின் அலட்சியமே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here