மீண்டும் டிரம்ப்: குடியரசு கட்சிக்கு புதிய தெம்பு

தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் ஈடுபட உள்ளதால், குடியரசுக் கட்சியில் புதிய தெம்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு, மூன்று வாரங்களே உள்ள நிலையில், இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காதது எனத் துவங்கி, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும், அதிபர் டொனால்டு டிரம்பின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.முதல் பொது விவாதத்தில், ஜோ பிடனை பேசவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்தார் டிரம்ப். இரண்டாவது பொது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர பிரசாரம் மட்டுமே, கட்சியை காப்பாற்றும் நிலை உள்ளது. இந்த சிக்கல்களுடன், நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்படாததால், பிரசாரம் செய்ய நிதி இல்லாமல், டிரம்பின் பிரசார குழு தவித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தன் பிரசாரத்தை துவக்குகிறார் டிரம்ப். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக, அவர் அறிவித்துள்ளார்.

இது குடியரசுக் கட்சியினர் இடையே புதிய தெம்பை ஏற்படுத்தி உள்ளது.டிரம்ப் மகள் இவங்கா, மகன் ஜூனியர் டிரம்ப் உள்ளிட்டோர், தங்கள் தந்தைக்காக, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ‘கடந்த, 2016 தேர்தலில், துவக்கத்தில் இருந்தே ஹிலாரி கிளிண்டன் தான் முன்னிலையில் இருந்தார். ஆனால், டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். அதுபோல, இந்த முறையும் அவர் தான் வெல்வார்’ என, குடியரசுக் கட்சி மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here