கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள சூழலில், சீனாவின் பொருளாதாரம் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 4.9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3.2 சதவீதமாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்று முதன் முதலாகப் பரவிய சீனாவில் தற்போது நோய்த்தொற்று பரவல் பெருமளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
முக்கியமாக மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளும் தொடா்ந்து இயங்கி வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. முகக் கவசங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் தேவை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பாண்டில் சீனாவின் பொருளாதாரம் மட்டுமே வளா்ச்சியைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் உள்ளிட்டவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.