குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் எந்தவொரு விபத்தோ, சொத்துக்கள் சேதமோ ஏற்படவில்லை.
இதுகுறித்து காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இன்று காலை 8.18 மணியளவில் இது 3.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்ச் மாவட்டத்தின் அஞ்சர் நகரிலிருந்து 12 கி.மீ. மேற்கு-தென்மேற்கில் 19.5 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இவ்வாறு நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், கட்ச் மாவட்டம் மிக அதிக ஆபத்துள்ள நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இப்பகுதி ஜனவரி 2001 இல் 6.9 ரிக்டர் அளவிலான பேரழிவு பூகம்பத்தைக் கண்டது. இதனால் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 12,300 மக்கள் பலியாயினர். நில நடுக்க மையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டம் ஆயின. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர்.
வங்கதேசம், மேகாலயாவிலும் நேற்று உணரப்பட்ட நிலநடுக்கம்
நேற்று காலை நமது அண்டை நாடான வங்க தேசத்தில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு மிதமான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று அதிகாலை மேகாலயாவிலும் 2.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.