தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், புது தலைவலியாக, டெங்கு பாதிப்பும் மக்களை அச்சுறுத்த துவங்கி உள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்துக்கு பிறகே பரவும் டெங்கு காய்ச்சல், சமீப காலமாக ஆண்டு முழுவதும் பரவி வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலமான நவம்பர், டிசம்பரில் பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 440 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பரவலாக டெங்கு பாதிப்பும் உள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முகாமில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இது வரை 221 பேருக்கு பரிசோதனைகள் செய்ததில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது.
இவர்களில் 4 பேர் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்அருங்குணம், காயல்பட்டு, மேல்பாதியை சேர்ந்தவர்கள் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், டெங்கு பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.இது குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் கவனம் செலுத்தி வருவதோடு, டெங்கு பாதிப்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களில் எந்த வகை வைரஸ்கள் உள்ளன என ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. மாவட்டத்தில் ஒரு அலுவலர் மட்டுமே பணியில் இருந்த நிலையில், 3 மாதத்திற்கு ஒரு முறை 25 கொசுக்களை சேகரித்து ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது, மேலும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவினர் தலா 25 கொசுக்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் என, நோய் பாதிப்பு உள்ளதாக 90 கிராமங்களில் இந்த ஆய்வு நடக்கிறது.
மேலும், வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியில் 665 பேர் ஈடுபட்டனர். அவர்களில் பலர் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதால், களப்பணியாளர்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 பேராக இருந்த களப்பணியாளர் எண்ணிக்கையை 50 ஆகவும், பேரூராட்சிக்கு 10 ஆக இருந்ததை 20 ஆகவும், நகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட உள்ளது.குறிப்பாக கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களுக்கு கூடுதல் களப்பணியாளர்கள் நியமிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதார பணி அலுவலர்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை சீசனில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கம். சுகாதாரத்துறை சார்பில் கொசுப்புழு ஒழிப்பாளர்கள் மூலம் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பொது மக்களும் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரித்தல், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை மூலமாக டெங்கு பரவாமல் தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.