ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்….

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதல்நாளில் நடந்த ஒற்றையர் (லண்டன் 2020 பிரிவு) ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவை சந்தித்தார்.

77 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதுகிறார்.

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் கருத்து தெரிவிக்கையில், ‘இது எனக்கு நல்ல தொடக்கமாகும். இந்த போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் எப்பொழுதும் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும். மிகவும் சிறந்த வீரர்கள் பங்கேற்கும் இதில் எல்லா ஆட்டமும் கடினமாக தான் இருக்கும். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கினேன். இந்த ஆட்டத்தில் எனது ‘செர்வ்’ மிகவும் நன்றாக அமைந்தது. அது என்னுடைய வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாகும். நேர்செட்டில் வென்று இருப்பதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.

நேற்று நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ‘நம்பர்’ ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேனை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 78 நிமிடமே தேவைப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here