விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற 13 ஆம்தேதி தியேட்டர்களில் வெளிவருகிறது. திருப்பூரில் பேட்டி அளித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.
கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளிவருவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆனால் தற்போது தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள மாஸ்டர் படம் 50 சதவிகித இருக்கையுடன் தியேட்டரில் வெளியானால் குறிப்பிட்ட வசூலை பெறமுடியாமல் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் நேற்று முன்தினம் இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது தியேட்டரில் 100 சதவித இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட திரைப்படத்துறை சார்ந்த சில கோரிக்கைகளை வைத்துள்ளார். முதல்வரும் அதிகாரிகளுடன் கலந்து பேசி, முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார்.