இப்போதைய பேச்சு தமிழ்ப்பள்ளி என்பதாகத்தான் இருக்க வேண்டும். வெகுவிரைவில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன என்பதுமட்டும் காரணமல்ல, தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் ஒரு காரணம் என்பதற்காக, இப்போதைய பேச்சு தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் பினாங்கு மாநில இந்து சங்கப்பேரவைத் தலைவர் மா.முனியாண்டி
அழகான பாடல் வரிகள் கூறுவதும் இதைத்தான் ” சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல, தன்னை திருத்திக்கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல” என்ற வரிகளை மீண்டும் உரசிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
நம்மொழி நமக்கானது. தாய் இன்றி நாமில்லை தாய்மொழியின்றியும் நாமில்லை என்ற வலுவான பாதையில் இப்போது குறுக்கீடுகள் அதிகமாகிவிட்டதுபோல் இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் குறைவதற்கு யார் காரணம்?
இது பற்றிய சிந்தனை குறைந்துவிட்டதா நமக்கு? அல்லது இது பற்றிய கவலை இல்லையா?
தமிழனுக்கு தமிழனே உயிராம் தமிழனுக்குத்தமிழனே தூக்குக்கயிராம் !
இப்படியும் கூறியிருக்கிறார்கள் என்றால் நம் அழிவுக்கு நாமே காரணம் ஆகிவிடுகிறோம் என்றுதானே அர்த்தம்.
இந்தச் சிந்தனை மாறவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தாரை வார்க்கப்பட்டால் மீட்பது என்பது எளிதான் காரியம் அல்ல. பின்னர் வருந்தி பயனில்லை.
ஒரு காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தன. இப்போது 527 இருப்பதாக அறியப்பட்டாலும் நிலைப்பது எத்தனை என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
நாம் மாறாவிட்டால் ஏமாந்து விடுவோம் ஏமாந்துவிட்டால் அதுவே நிரந்தரமாகிவிடும்.
நம் பள்ளிகளைக் காப்பது நம் கடமை. வேறு யாரும் உதவமாட்டார்கள். கண்கெட்டபின் சூரிய வணக்கம் ஒருபோதும் உதவாது.
இதை மறந்துவிட்டால் வருத்தம் ஒன்றே மிஞ்சும் என்கிறார் முனியாண்டி.
ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும்போது தமிழ்ப்பள்ளிகளில் நிறைவான பிள்ளைகள் இருப்பதை உறுதி செய்க என்கிறார் அவர்.
அப்படிச்செய்வது நம் உரிமையும் கடமையும் ஆகும்!