காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

தேனி

காஷ்மீரில் தீ விபத்தில் சிக்கி வீர மரணமடைந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல், இன்று அவரது சொந்த கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ஆறுமுகம் (36). இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி (30) என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (13) என்ற மகளும், சபரி (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லைப்பகுதியில் கூடாராம் அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஆறுமுகத்தின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

தொடர்ந்து, இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஆறுமுகத்தின் உடல் ராணுவ வாகனம் மூலம் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செழுத்தினர். அதனைத் தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கிகுண்டுகள் முழங்க, ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here