சபரிமலை :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
அன்றைய தினம் ஐயப்பசாமிக்கு திருவாபரணங்கள் அணிவது வழக்கம். இந்தநிலையில் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. இந்த திருவாபரணம் தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவாபரண ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் செல்கிறது.
நாளை மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும் திருவாபரணங்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.
வழக்கமாக மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, மகரஜோதி தினத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகர விளக்கின் முன்னோடியாக நேற்று மாலையில் பிரசாத சுத்தி கிரியை மற்றும் அதை சார்ந்த கணபதி பூஜை, பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்ணியாகம் ஆகியவை நடைபெற்றது.
திருவாபரண ஊர்வலத்தையொட்டி நேற்று பந்தளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.