விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் 75 ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்திய நிலையில், நேற்று முன்தினம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 மணி நேரம் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
டெல்லி எல்லைகளில் அக்டோபர் 2 ஆம் தேதி வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறி உள்ளனர்.









