விண்வெளியில் சாப்பிட பிரியாணி, கிச்சடி, ஊறுகாய்!

விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களின் உணவுப் பட்டியலில் பிரியாணி, கிச்சடி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தினை அடுத்த ஆண்டு செயல்படுத்துவதன் மூலம் புதிய சகாப்தம் படைக்கவுள்ளது இந்தியா.

விண்வெளி செல்லும் வீரர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது ராணுவ ஆய்வகத்தில் தயாராகி வருகின்றன.

விண்வெளி செல்வதற்காக ரஷ்யாவில் பயிற்சி பெற்று வரும் இந்திய விமானப் படையின் விண்வெளி வீரர்கள், போர் விமானிகளுக்கு இந்த உணவு பட்டியல் வழங்கப்படுகிறது.

விண்வெளியில் 7 நாட்கள் தங்கவுள்ள நிலையில், சுவை மிகுந்த பல்வேறு வகை உணவுப் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சிக்கன் பிரியாணி, சிக்கன் குருமா, சாஹி பன்னீர், டால் சாவல், ஆலு பரோட்டா, சப்பாத்தி, கிச்சடி, பீன்ஸ் சாஸ் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

இந்திய பாதுகாப்பு, மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மைசூரில் இயங்கும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இந்த உணவுப் பட்டியலுடன் மாங்காய் ஊறுகாயும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து அடர்த்தியான, ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒரு நாளுக்கு மூன்று உணவு வகைகளை விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதன் மூலம் 2,500 கலோரிகளை அதிகரிக்க முடியும் என உணவு ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்களது சுவைக்குத் தகுந்தாற் போல உணவு வகைகளை தேர்ந்தெடுக்கின்றனர். அதுபோலவே, இவை இந்திய விண்வெளி வீரர்களுக்கு வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படும் என்று மற்றோர் ஆராய்ச்சியாளர் கூறினார்.

இந்த உணவுப் பொருட்கள் 200, 300 கிராம்களாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுவிடும். வீரர்கள் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளைத் எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here