சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தைச் சொந்தமாக்குவோம்!

கெடா, கூலிம் நகரில் இருந்து செர்டாங் செல்லும் வழியில் 15ஆவது கிலோ மீட்டரில் சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளது. 1936 இல் இப்பள்ளி கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 86 ஆண்டுகள் வரலாற்றுப் பதிவைக் கொண்டது இப்பள்ளி.

இருப்பினும் இப்பள்ளி அதன்  சொந்த நிலத்தில் இல்லை என்பது தமிழ்நெஞ்சங்களின் இதயங்களில் ஈட்டியைக் கொண்டு குத்துவது போல் உள்ளது.

இந்தியப் பாட்டாளி சமூகத்தின் உழைப்பாலும் தியாகங்களாலும் செல்வச் செழிப்பில் கொழுத்துப்போன தோட்ட நிர்வாகங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் அந்நிலத்தைப் பள்ளியின் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதற்கு மனம் இல்லாமல் போனது மகா கேவலத்தின் உச்சம்.

பிரபலமான தோட்ட சொத்துடைமை நிறுவனமான சொக்ஃபினுக்குச் சொந்தமான இத்தோட்டம், காலப்போக்கில் சைமை் டார்பி பிளாண்டேஷன் நிறுவனத்திற்குக் கைமாறியது. அதனைப் பின்னர் கெடா மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்கே) வாங்கியது.

அந்த நிலம் இப்போது பிகேஎன்கே-வுக்குச் சொந்தமாகிவிட்டது. சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அந்த நிலத்தில்தான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் இப்பள்ளி நிலப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. 1.070 ஏக்கரில் பள்ளி அமைந்துள்ளது.

மத்திய அரசாங்கத்திடம் இந்த நிலப் பிரச்சினை தொடர்பில் சென்றபோது, இதனை மாநில அரசாங்கம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்ற பதில்தான் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் அப்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரிடம் அன்றைய மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ரெ. சண்முகம் இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால், தீர்வு காணப்படுவதற்கு முன்பாகவே மாநில அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. பாஸ் கட்சியின் முகம்மட் சனுசி முகமட் நோர் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றார்.

இந்தப் பள்ளி நிலத்தை 30 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்படி பிகேஎன்கே பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இதற்கான கட்டணம் 1 லட்சத்து 63 ஆயிரம் வெள்ளி. இதில் 10 விழுக்காட்டுப் பணத்தை முன்பணமாக, அதாவது 16 ஆயிரத்து 30 ஆயிரம் வெள்ளியைச் செலுத்த வேண்டும் என்றும் பிகேஎன்கே கேட்டுக்கொண்டது.

இதுவரை நாட்டில் வேறு எந்தத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இப்படியொரு அவலம் ஏற்பட்டதில்லை. அதுவும் பாஜாவுக்கு இருந்ததும் இல்லை. அப்படி எதுவும் கேள்விப்பட்டதும் இல்லை.

இப்போராட்டத்திற்கு மத்தியில் அண்மையில் முகம்மட் சனுசியைப் பள்ளியின் நடப்பு தலைமையாசிரியர் பழனியப்பன் முத்துசாமி தலைமையில் ஒரு குழு சந்தித்து பள்ளி நில விவகாரம் குறித்து பேசியிருக்கிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் 3 ஆண்டுகள் (1.2.2021 முதல் 30.1.2024 வரை) இலவசமாக இருப்பதற்கு மந்திரி பெசார் அனுமதி வழங்கியிருக்கிறார். இதுவும் தற்காலிகமாகத்தான். இதற்கு மத்தியில் எதுவும் நடக்கலாம்.

தொடர்ந்து இருப்பதற்கு மூன்று ஆண்டுகள் தவணை காலாவதியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சுங்கை உலார் தமிழ்ப்பள்ளிக்கான அந்த நிலம் அப்பள்ளிக்கே சொந்தமாக வேண்டும். இதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் நம் சமூகத்தினர் செய்து முடிக்க வேண்டும்.

மஇகா உள்ளிட்ட அனைத்து இந்தியர் சார்பு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் அரசுசாரா இயக்கங்களும் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆதரவாக களம் இறங்கி வெற்றிகரமாகக் காரியத்தை முடிக்க வேண்டும்.

நிலத்தைச் சொந்தமாக்குவதற்குப் பழனியப்பன் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். இந்திய சமூகம் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

உணர்ச்சிவங்ப்படாமல் மிகவும் நிதானமாக இவ்விவகாரத்தைக் கையாண்டால் கண்டிப்பாகச் சாதகமான முடிவைப் பெறலாம்.

குற்றம் குறை சொல்லிப் பிரச்சினையை விபரீதமாக்காமல் நிதானமாக – விவேகமாகச் செயல்பட்டு நிலத்தை உறுதிசெய்ய வேண்டும். அதுவே தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாக – சேவையாக இருக்கும்.

தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமையில் 10 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றுகின்ற நிலையில் 173 மாணவர்கள் படிக்கின்றனர்.

நம்முடைய ஒற்றுமை – முயற்சி இவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரட்டும். இத்தோட்டத்தில் நமது அடையாளத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here