போராடினால் 20 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவம் எச்சரிக்கை

மியான்மரில் ராணுவ அட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் , முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யனக்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மியான்மர் ராணுவம் தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here