கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
சப்த ரிஷிகளில் முக்கியமானவர், காசியபர். இவருக்கு பல மனைவியர் உண்டு. அவர்களில் ஒருத்தியான அதிதி, கர்ப்பவதியாக இருந்தாள். அப்போது ஒரு நாள் வாசலில் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தாள். அவளது இல்லத்தின் முன்பாக முதியவர் ஒருவர், யாசகம் கேட்டு நின்று கொண்டிருந்தார்.
இதனால் பதறிப்போன அதிதி, இதுபற்றி தனது கணவர் காசியபரிடம் கூறினாள். அவரோ “நீ வீணாக பதற்றம் கொள்ள வேண்டாம். அமிர்த உலகத்தில் இருந்து அழிவே இல்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்றார்.
அந்த வாழ்த்தின்படி பிரகாசமான ஒளியோடு பிறந்தவர்தான், சூரிய பகவான். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், உலகை வலம் வந்து உலக உயிர்களை காப்பதால், திதிகளில் ஏதாவது திதியான சப்தமி நாளில் இவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியது. அதிலும் ரத சப்தமி அன்று விரதம் கடைப்பிடிப்பது, நமக்கு பல்வேறு பலன்களைப் பெற்றுத்தரும்.
இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள், குழந்தைகள் 7 எருக்கம் இலைகள், அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். 7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும்.
ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும்.