நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் -சபாநாயகர்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமிற்கு எதிராக வரவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படாது என்று சட்டமன்றச் சபாநாயகர் டத்தோஸ்ரீ டாக்டர் அவ்வாலுடின் சையிட் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் அண்மையில் எழுந்த பாரம்பரிய சட்டம் சார்ந்த சர்ச்சையைத் தொடர்ந்து, மந்திரி பெசாரைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் நோக்கில் தேசிய முன்னணி (BN) அல்லது பெரிகாத்தான் நேஷனல் (PN) சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

“அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதுபோன்ற எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்படாது. உறுதிப்படுத்தப்படாத அல்லது சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை உயர்ந்த சட்டமன்ற அவையில் விவாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று டத்தோஸ்ரீ டாக்டர் அவ்வாலுடின் சையிட் கூறினார்.

அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள 5 நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரை நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி, போர்ட்டிக்சனில் உள்ள ‘இஸ்தானா லகுனா பிரு’வில் வைத்து துவாங்கு முஹ்ரிஸைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரகடனத்தில் மந்திரி பெசார் இஸ்மாயில் கையெழுத்திட்டதாகச் சில பாரம்பரியத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், தான் கட்டாயப்படுத்தப்பட்டு மிரட்டப்பட்டதன் பேரிலேயே அதில் கையெழுத்திட்டதாகக் கூறிய மந்திரி பெசார் இஸ்மாயில், இது தொடர்பாகக் காவல் துறையில் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளார்.

மேலும், 1959-ஆம் ஆண்டைய நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி அந்தப் பிரகடனம் செல்லாது எனவும், துவாங்கு முஹ்ரிஸ் அவர்களுக்கே தனது முழு ஆதரவு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநில சட்டமன்றம் என்பது கொள்கைகளையும் சட்டங்களையும் இயற்றும் உயரிய இடம் எனக் குறிப்பிட்ட சபாநாயகர், பாரம்பரியச் சட்டம் தொடர்பான இந்த விவகாரத்தை ‘டேவான் கெஅடிலான் டான் உண்டாங்க்’ (Dewan Keadilan dan Undang) போன்ற உரிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் தீர்க்க முதலில் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். பொதுமக்கள் வதந்திகளை நம்பவோ அல்லது தேவையின்றிப் பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here