விளையாட்டாய் சில கதைகள்:

டென்னிஸ் உலகின் மகாராணி

கடந்த நூற்றாண்டில் டென்னிஸ் உலகைக் கட்டி ஆண்ட மகாராணி என்று மார்ட்டினா நவரத்திலோவாவை சொல்லலாம். ஒற்றையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், 167 தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற மார்ட்டினா நவரத்திலோவா, இரட்டையர் பிரிவில் 177 பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளிலேயே 10 மில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை 1986- ஆம் ஆண்டு மார்ச் 8-  ஆம் தேதி அவர் பெற்றார்.

செக் நாட்டில் உள்ள பரேக் நகரில் 1956- ஆம் ஆண்டு பிறந்தவர் மார்ட்டினா நவரத்திலோவா. அவரது தந்தை மிரோஸ்லாவ் சுபெர்ட். மார்ட்டினாவின் தாயார் ஜானா சுபெர்ட், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், ஸ்கீயிங் ஆகிய போட்டிகளில் வல்லவராக இருந்தார்.

மார்ட்டினாவின் பாட்டியும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு செக் நாட்டுக்காக பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ளார். மார்ட்டினாவுக்கு 3 வயதாக இருந்தபோதே, அவரது பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, நவ்ரெட்டில் என்பவரை மார்ட்டினாவின் தாயார் திருமணம் செய்துகொண்டார்.

மார்ட்டினாவின் தாயார், தனது மகளையும் தன்னைப்போலவே விளையாட்டு வீராங்கனையாக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் 4 வயது முதலே அவருக்கு டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி கொடுத்தார். ஆரம்ப காலகட்டங்களில் தனது பாட்டி பயன்படுத்திய மரத்தால் ஆன டென்னிஸ் ராக்கெட்டையே மார்ட்டினாவும் பயன்படுத்தி வந்துள்ளார்.

அம்மா, பாட்டி தந்த ஊக்கத்தால், வேகமாக முன்னேறிய மார்ட்டினா நவரத்திலோவா, தனது 15- ஆவது வயதிலேயே செக் நாட்டின் தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆனார். இதைத் தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய மார்ட்டினா நவரத்திலோவா, 1980-களில் டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக பவனி வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here