மகளிரை நாளும் கொண்டாடுவோம்

 

அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்கள் இன்று வானில் பறக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். உலக நடப்புகளில் அதீத பங்காற்றி வருகின்றனர். ஆண்களுக்கு சரி நிகராக எல்லாத் துறைகளிலும் கோலோச்சுகின்றனர்.

எண்ணிலடங்கா போராட்டங்கள், அளவிட முடியாத தியாகங்கள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வலிகள் – இவற்றின் ஒட்டுமொத்த வெற்றியே இன்றைய இந்த உலகளாவிய மகளிர் தினம்.

இது கொண்டாட்ட தினம் அல்ல; பெண்மைக்கு மகுடம் சூட்டி நன்றி சொல்லும் ஓர் உயரிய – உன்னத நாள்!

பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் போன்றவற்றை நினைவுபடுத்தும் நாளாகவும் இந்த உலக மகளிர் தினம் அலங்கரிக்கப்படுகிறது.

வெளி உலகத்தில் உள்ள பெண்களைப் பார்ப்பதற்கு முன்னதாக நமது வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட தாய், மனைவி, அக்காள், தங்கை, மகள், பாட்டி, அத்தை, சித்தி, பெரியம்மா ஆகியோருக்கு நன்றி சொல்லி போற்றுவோம்.

பெண்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். பிரதமர், அதிபர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், விளையாட்டு வீராங்கனைகள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் போற்றும் அளவுக்கு அவர்களின் சாதனைகள் திக்கெட்டும் திசைகைளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

அன்பையும் பாசத்தையும் பஞ்சமில்லாமல் வாரித் தரக்கூடிய இவர்கள் நாட்டைப் பாதுகாக்கும் பணிகளில் தீப்பந்தமாகவும் மாறி விடுகின்றனர். போலீஸ் – ராணுவப் படைகளில் உயர் பதவிகளில் இன்று வலிமை மிகுந்த அரணாக திகழ்கின்றனர்.

உடலால் வலிமைமிக்க ஆண்களைவிட மன வலிமையில் பெண்களே இன்று சிறந்து விளங்குகின்றனர். உலக அளவில் அதனை நிரூபித்திருக்கும் பல நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடித்துள்ளன.

ஆண்கள் துவண்டு போகும் நேரத்தில் தாங்கிப் பிடித்து நேர்மறை எண்ணங்களையும் சிந்தனைகளையும் விதைத்து வாழ்க்கை எனும் ஓட்டத்தில் முன்பை விட பல மடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு ஆக்கப்பூர்வமானது – அலாதியானது. ஒரு குடும்பத்தையே தாங்கிச் சுமப்பதிலும் பெண்களைவிட சிறந்தவர் எவரும் இலர்.

ஒரு வீட்டைத் தாங்கிப் பிடிப்பது நான்கு தூண்கள். ஐந்தாவது தூணாக தாங்கிப் பிடிப்பதே பெண்கள் என்றால் அது மிகையாகாது – அதுவே நிதர்சன உண்மையும் ஆகும்.

போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகம் எங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவே பெண் விடுதலை – பெண்ணியம் பெருமை.
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளையும் அவர்கள் வென்றெடுத்தனர். இன்று உலகம் முழுவதிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு ஆணுக்கு நிகராக கோலோச்சுபவர்களாகப் பெண்கள் இன்று உருமாற்றம் கண்டு வருகின்றனர்.

தங்கள் ஆதிக்கத்தால் மண்ணில் இருந்து விண்வெளி வரை வேரூன்றி வரும் பெண்களை மார்ச் 8ஆம் தேதி மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவோம்.

நம் உயர்வுக்கு உழைத்த – உழைத்துக் கொண்டிருக்கும் -நமக்கு உடலும் உயிரும் தந்த தாய் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here