அரசியலில் நான் ‘லொடுக்கு’ பாண்டி இல்லை

– கருணாஸ் சிறப்பு பேட்டி

பாடகர், நடிகர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர், அரசியல்வாதி, எம்.எல்.ஏ., என, பன்முகங்களை உடையவர் கருணாஸ். 2016 இல், ஜெயலலிதாவால், ‘சீட்’ வழங்கப்பட்டு, அரசியலில் கால் பதித்தவர், அவரின் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வுக்கு வேண்டாதவராகி விட்டார்.
அ.தி.மு.க., – தி.மு.க., கைவிட்ட நிலையில், இத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி யுள்ளார். அதே சமயம், அ.தி.மு.க., கூட்டணியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என, கொதிப்பில் இருக்கும் கருணாஸ், ‘தினமலர்’ நாளிதழ் தேர்தல் களத்திற்காக அளித்த சிறப்பு பேட்டி:
உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். ஏனெனில், என் நீண்டகால கோரிக்கையான, கள்ளர், மறவர், அகமுடையார் இனத்தை தேவரினமாக அறிவிக்கவில்லை. இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதையும் நிறைவேற்றவில்லை. எங்களை நம்பவைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை, அ.தி.மு.க., கேள்விக்குறியாக்கி விட்டது.
இத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களுக்கு எதிராக நாங்கள் வேலை செய்ய உள்ளோம்.அ.தி.மு.க., ஏன் தயங்குகிறது?பொதுவான கட்சியாக எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த, அ.தி.மு.க., இன்று சில ஜாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், பிற ஜாதியினரை கண்டு கொள்வதில்லை.

இவர்களின் ஓட்டுகளும் தேவையில்லை என, முதல்வர் இ.பி.எஸ்., கருதுகிறார்.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்து விட்டு, ‘சீட்’ தரவில்லை என்பதால், உடனே, ‘வாபஸ்’ வாங்கி விட்டீர்களே?போட்டி சட்டசபை கூட்டம் நடக்கும் போதே, ஸ்டாலின் என்னிடம் பேசி, ‘சீட்’ தருவதாக உத்தரவாதம் தந்தார். டிசம்பரில் அக்கட்சியின், 2 ஆம் கட்ட தலைவர்கள், எங்கள் ஆதரவு கேட்டு பேசினர். நானும், ‘சீட்’ கேட்டு கடிதம் கொடுத்தேன். ஆனால், ‘ஆதரவு மட்டுமே’ நான் தருவதாக, தி.மு.க., தரப்பில் அறிவிக்கப்பட்டது.

எனக்கு பணம் முக்கியமல்ல. பா.ஜ.,வில் கூட என்னிடம் பேசினர். வாரிய பதவி தருவதாக கூறினர்; நான் ஏற்கவில்லை. தி.மு.க.,விலும் அப்படியே கூறினர்.

முக்குலத்தோர் சமூகத்திற்கு அங்கீகாரம் தராத வகையில், ‘சீட்’ தராததால் கடிதத்தை, ‘வாபஸ்’ பெற்றேன்.தேர்தலுக்காக முக்குலத்தோர் பற்றி பேசுகிறார்; வீட்டில் மனைவி, குழந்தைகள் கிறிஸ்துவராக உள்ளனர் என, உங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே? நான், காதல் திருமணம் செய்தவன். என்றைக்கு நடிகனாக, அரசியல்வாதியாக வந்தேனோ, அன்றைக்கே விமர்சனத்திற்கு உள்ளானவன் தான். இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

முக்குலத்தோருக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என, அ.தி.மு.க.,வை குறை கூறுகிறீர்கள். ஆனால், பிரதிநிதித்துவம் தந்துள்ளார்களே? இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இன்று பதவியில் இருக்கிறார்கள்.

நான் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும், அவசரமாக மூன்று பேருக்கு, ‘சீட்’ தந்துள்ளனர். என் இடத்தை நிரப்ப மூன்று பேர் தேவைப்படுகிறது. ஜெயலலிதா எப்படி உங்களை தேடிபிடித்தார்? முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று, என்னை அழைத்தார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் என்னை காண்பித்து, ‘கருணாஸ் ஹீ இஸ் ஏ ஒய்ட் காலர்’ என்று பாராட்டினார்.

அவரது எண்ணத்தை, என் தொகுதியில் செயல்படுத்தினேன்.முக்குலத்தோர் ஓட்டுகளை நம்பி, உங்கள் கட்சி ஏன் தனித்து போட்டியிடவில்லை?நாங்கள், 84 தொகுதிகளை கண்டறிந்திருந்தோம்.

வேட்பாளர்களை நிறுத்தியிருக்க முடியும். ஆனால், என் சுயநலத்திற்காக, என்னை நம்பியுள்ள இளைஞர்களை தவறாக வழிநடத்த விரும்பவில்லை. அதையும் மீறி, 10 பேர் போட்டியிட தயாராக இருந்தனர். நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காக, அவர்களை பலிகடாவாக்க தயாராக இல்லை.

நான் கல்லுாரி காலத்தில் இருந்தே, அரசியலில் இருக்கிறேன். அரசியலில் நான், ‘லொடுக்கு’ பாண்டி கிடையாது. காமெடியனும் கிடையாது என்பதில், தெளிவாக இருக்கிறேன்.திருவாடானை தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று சொன்னீர்களே. ஏன்?ஜெ., இருக்கும் வரை, அங்கு வாரத்தில் மூன்று நாட்கள் சென்று வந்தேன்.

ஜெ., மறைவுக்கு பின், ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., கோஷ்டிகள் என, பிரிந்தனர். நான் ஓ.பி.எஸ்.,சிற்கு ஆதரவு தரவில்லை என்று தொகுதியில் சிலர், என் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தனர். ஜாதி கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர். என்னால் கலவரம் வந்து விடக்கூடாது என்பதற்காக, தொகுதிக்கு செல்வதை புறக்கணித்தேன்.

பாதுகாப்பும் எனக்கு வழங்கப்படவில்லை.கூவத்துாரில் என்ன தான் நடந்தது?என்னிடமும், குதிரை பேரம் பேசப்பட்டது உண்மை. ஓ.பி.எஸ்., தரப்பில் என்னிடம் பேரம் பேசினர். எனக்கு காசுதான் முக்கியம் என்றால், நான் வாங்கி சென்றிருப்பேனே. எனக்கு தேவை இல்லை. நான் சார்ந்த சமூகத்திற்கு, ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் கூவத்துாருக்கு போக செய்தது. சசிகலா சொன்னதால், இ.பி.எஸ்.,சிற்கு ஆதரவு அளித்தேன். இவ்வாறு கருணாஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here