தேசிய பதிவகத்தின் கண்கள் திறக்குமா?

வாழ்வுக்கு வழிதேடும் வசந்தங்கள்

தந்தையோ மலேசிய மண்ணின் சட்டப்பூர்வ பிரஜை. அவருக்குப் பிறந்த 4 மகள்களோ நாடற்றவர்களாக பரிதவிக்கின்றனர். ஏன்டா பிறந்தோம் என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு மனமுடைந்து போயிருக்கின்றனர்.

பேராக்கைச் சேர்ந்த நெடுஞ்செழியனுக்கு தாட்சாயணி, தனஸ்ரீ, வித்யாஸ்ரீ, சுகாசினி ஆகிய நான்கு பெண் பிள்ளைகள். தாயார் சிங்கப்பூர் பிரஜை. இந்த 4 பிள்ளைகளின் அடையாள ஆவணங்கள் பதிவுக்குத் தேவையான ஆவணங்களுடன் வருகிறேன் என்று சிங்கைக்குப் பயணமானார் – போனவர் போனவராகவே ஆகிவிட்டார்.

இந்த நான்கு பெண்களில் அனைவருமே டிரா மலேசியா தயவால் எஸ்பிஎம் வரை கல்வி கற்றிருக்கின்றனர். படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தும் அடையாள ஆவணங்கள் இல்லாத நிலையில் உயர் கல்வியை அவர்களால் தொடர இயலவில்லை.

அடையாள ஆவணங்கள் இல்லாமல் இருப்பது உடலில் உயிர் இல்லாதது போன்று ஓர் உணர்வையும் வலியையும் தருகிறது என்று இந்த நான்கு சகோதரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பெற்றோரில் யாராவது ஒருவர் மலேசியப் பிரஜையாக இருப்பாரேயானால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் தெள்ளத் தெளிவாக வலியுறுத்துகிறது.

ஆனால், இவர்கள் விவகாரத்தில் அரங்ாங்கத்தின் குறிப்பாக உள்துறை அமைச்சு தேசியப் பதிவகத்தின் போக்கு ங்ட்ட அமலாக்கத்தில் உள்ள ஓட்டைகளையும் பலவீனங்களையும் முரண்பாடுகளையும் நன்றாகவே காட்டுகிறது.

2014 இல் தொடங்கிய இவர்களின் இந்த விவகாரம் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இறுதி முயற்சியாக நீதிமன்றம் செல்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்குரிய முழுச் செலவையும் டிரா மலேசியா ஏற்றுக் கொண்டிருப்பது அதன் சமுதாயக் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
மரபணுச் (டிஎன்ஏ) சோதனையின் வழி தாட்சாயணி, தனஸ்ரீ, வித்யாஸ்ரீ, சுகாசினி ஆகிய நான்கு பிள்ளைகளும் மலேசியரான நெடுஞ்ஙெ்ழியனுக்குப் பிறந்தவர்கள் என்பது மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான  செலவுத் தொகை 2,600 ரிங்கிட்டை டிரா மலேசியாதான் ஏற்றுக் கொண்டது.

எல்லாம் இருந்தும் இவர்களுக்கு அடையாள ஆவணங்கள் வழங்குவதில் என்னதான் பிரச்சினை என்பது தெரியவும் இல்லை – புரியவும் இல்லை. நிரந்தரமாக எங்கும் வேலை செய்ய முடியாமல் ஒரு பிரஜைக்குரிய எந்த ஓர் அடிப்படை அனுகூலங்களையும் சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் இவர்கள் படும் வேதனைகளை வெறும் வார்த்தைகளால் கொட்டிவிட முடியாது.

கடந்த காலங்களில் 4 அமைச்சர்களின் பார்வைக்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதுதான் மிகப்பெரிய வேதனை.

இந்த 4 சகோதரிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. சமுதாயத் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? உள்துறை அமைச்சகம் தேசியப் பதிவகமும் மனம் இரங்குமா?

பரிதாபத்திற்குரிய இந்த 4 சகோதரிகளுக்கும் நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம். நாடற்றவர்களாக நிர்க்கதியாக அல்லாடும் இவர்களுக்கு ஒரு புதிய உயிர்மூச்சுக் கொடுப்போம். அடையாள ஆவணங்கள்தாம் இவர்களுக்கான அந்த உயிர் மூச்சு.

இந்த நான்கு சகோதரிகளும் 2019ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் உள்துறை அமைச்சின் கட்டடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக டிரா மலேசியாவுக்கு தொலைபேசி வழி தகவல் தந்தனர்.

அலறி அடித்துக் கொண்டு அங்கு விரைந்த டிரா மலேசியா அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து வந்து தகுந்த ஆலோசனைகள், ஆதரவு வார்த்தைகள் சொல்லி மீண்டும் ஈப்போவுக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களின் காயம் மிகப்பெரியது. வலியும் கொடியது. சம்பந்தப்பட்டவர்களின் கண்கள் திறக்கட்டும். இவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்றி வைக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here