ஜோகூர்:
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது உறவினரை காணச் சென்றிருந்த பெண்மணியின் செயல் பார்ப்போர் மனதை நெகிழவைத்துள்ளது.
தமது குடும்ப உறுப்பினரின் படுக்கைக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த நோயாளி ஒருவர், சொந்தமாக உணவு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்ததை அஞ்சலா தேவி, 63, கவனித்தார்.
அடுத்த கணமே, அந்தத் தாயுள்ளம் அந்த இளம் ஆடவருக்கு உதவிக்கரம் நீட்டியது.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நோயாளியின் படுக்கையில் அமர்ந்து அவருக்கு உணவூட்டினார் அஞ்சலா தேவி.
இந்த சம்பவத்தை காட்டும் காணொளி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“அந்த நோயாளி சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். என் குடும்பம் அவருக்கு உதவியது,” என்ற வாசகத்துடன் அந்தக் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அஞ்சலா தேவி ஊட்டிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே அந்த இளம் மலாய் ஆடவர், தமது கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைப்பதை அந்த 26 வினாடிக் காணொளி காட்டியது.





















