சுங்கை பீலேக் புதிய தமிழ்ப்பள்ளி

-மின்சாரம் இணைக்க நடவடிக்கை

டிங்கில்-

சுங்கை பீலேக்கில் கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்ப்பள்ளிக்கு மின்சாரம் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மின்சார வாரிய உறுப்பினர் டத்தோ என்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சுமார் 43 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்டு வரும் இப்பள்ளிக்கு அருகில் இருக்கும் துணை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் இணைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பூமியின் கீழ் அல்லது மின்சாரத் தூண்கள் மூலம் மேலிருந்து மின்சார இணைப்பைப் பெறும். அதன் செலவுகளைப் பொறுத்து அமையும் என்று அவர் கூறினார்.

டிங்கில் லாபுஹான் டாகாங் அருகில் டி.என்.பி. மின்சார தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அவர் செய்தியாளர்களிடம் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.

மின்சார இணைப்பின் செலவுகளைக் குறைப்பது குறித்த கடிதம் ஒன்றை பள்ளி மேலாளர் வாரியம் சிப்பாங் நகராண்மைக் கழகத்திடம் வழங்கியுள்ளதாகத் தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முடிவைப் பொறுத்து மின்சார இணைப்பு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பீலேக் இடைநிலைப்பள்ளி அருகில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளி பதினாறு வகுப்பறைகளைக் கொண்டுள்ளதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்பள்ளியின் கட்டுமானப் பணி தற்போது 90 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகவும் பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் அ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

எஞ்சிய பணிகள் பூர்த்தியடைந்ததும் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் கல்வி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கிடையில் மின்சார இணைப்பிற்கு டத்தோ ரவிச்சந்திரனின் உதவி நாடப்பட்டதாகவும் கூறினார்.

சுங்கை பீலேக்கில் புதிய தமிழ்ப்பள்ளி ஒன்று அமைய வேண்டும் என்று மேலைவை முன்னாள் உறுப்பினர் அமரர் டத்தோ வீ.கா. செல்லப்பனின் கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தமது தலைமையில் இயங்கும் சுங்கை பீலேக் இந்தியர் நலனபிருத்தி சங்கம், ம.இ.கா. கம்போங் பாரு கிளை ஆகிய நிர்வாக உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் பெரும் முயற்சியில் சுங்கை பீலேக்கில் புதிய தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளதாகவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.

-எம்.எஸ்.மணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here