நலமாக வாழத்தானே வாழ்க்கை -தொலைந்து போவதற்கல்ல!

வேலை என்பது வாழ்க்கை நடத்த என்பார்கள். இப்போது அப்படித் தோன்றவில்லை.வாழ்க்கையை நகர்த்தவே வேலை செய்யவேண்டியதாயிற்று என்பதாக ஆகிவிட்டது. வருமானம் வருகிறது ,செலவுக்குப் போதும் என்ற எண்ணம் இப்போது மக்களிடம் இல்லை. ஏதோ வருகிறது செலவு செய்கிறொம் என்றுதான் பலர் கூறுகிறார்கள். 

பொதுவாகவே ஒரு கருத்து நிலவுகிறது. மலேசியர்கள் அதிகம் செலவு செய்கிறார்களாம். குறிப்பாக 40 பிரிவு மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள் என்று யாரேனும் அதிபுத்திசாலிகள் சொன்னால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்லை  என்றுதான் பொருள்.

முதலில் நிறைவான வருமானம் பெறுகிறார்களா என்று எவ்ரேனும் ஆய்வு செய்திருக்கிறார்களா? வேலையில் மன அழுத்தம் இல்லாமலிருக்கிறார்களா?

இப்போதெல்லாம் எதெற்கெடுத்தாலும் கொரோனா -19 காரணமாகிவிட்டது. அஃதே உண்மை என்றாலும் இதற்கு முன் அப்படி இல்லையே. விலைவாசிகள் ஏறிகொண்டேயிருக்கிறது. ஏன் ஏற்றம் காண்கிறது  என்பதற்குச் சரியான, துல்லியமான, நியாயமான பதில்கள் இல்லை.

முன்பெல்லாம் வருமானம் அத்துணைச் சிறப்பாக இருந்ததில்லை. இப்போது விலை வாசிகள் பன்மடங்கு உயர்ந்தபின் மட்டும் எப்படி இருக்கும்?

நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் மக்களுக்கு வழியில்லை என்பதுதான் ஒட்டுமொத்த  பதிலாக இருக்கிறது. இதனால் மக்கள் நிம்மதி தொலைத்தவர்களாகவே வாழ்நாளை கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் ஆர் ஆசிரியர் தன் மகனை காரிலேயே விட்டுச்சென்றிருக்கிறார். அச்சிறுவன் மரணமடைந்திருக்கிறான் என்றால் அவரின் வேலை, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்றெல்லாம் கணக்கில் சேர்க்க வேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இவற்றுக்கெல்லாம்  மன அழுத்தமே முக்கிய காரணம் என்றால் அதற்கான காரணம் முதலில் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிய  வந்திருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட இதுவே முதன்மைக் காரணம். இதனால் வருமானம் பாதிப்பு, விலைவாசி உயர்வு, ஓய்வின்மை காரணங்களாகிவிடுகின்றன.

ஸ்பெயின்  நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த நான்கு நாட்களில் உற்பத்தித்றன் சிறப்பாக கூடியிருக்கிறது, மக்களின் மன அழுத்தம் குறைந்திருக்கிறது, மகிழ்சியான மக்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களாம். இது எப்படி சாத்தியம்.

பள்ளிகளுக்கும் நான்கு நாட்கள் என்பதும் சரியானதாகவே இருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்பது மக்களை மனழுத்தத்ததிலிருந்து விடுபடச் செய்யும். செலவுகள் குறையும். சாலை நெரிசல்களிலிருந்து விடுபடலாம் .

நாட்டின் சுற்றுச்சுழல் பாதுகாப்பானதாக இருக்கும். புகை நெடி குறைந்துவிடும். சுற்றுலா கூடும். மருத்துவச்செலவு குறையும் , உறவுகள் மேம்படும் .இன்னும் பல நன்மைகள் இருக்கின்றன. உழைப்பிற்கே வாழ்நாளை தொலைத்துவிடுவதா நியாயம்?

மக்கள் நலன்தான் முக்கியம் என்பது பேச்சாக மட்டும் இல்லாமல் செயாலாக இருந்தால் நிச்சயம் பயனாக அமையும். 

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்பதால் நட்டமில்லை. நேரத்திட்டமிடல்  ஒழுங்குபடுமானால் இவை நமக்கும் சாத்தியமே! 

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here