கோலாலம்பூர் :
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 18 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக 40 வயது தந்தை மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
சந்தேக நபரான ஜி. தேவேந்திரன் (G. Thevendhiran) மீது வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் நூர்ஜிஹான் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் அவர் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார். கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த சந்தேக நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று காலை 8:30 மணி முதல் 10:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில், பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்துத் தனது 18 மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 13 அன்று குழந்தை சுல்தானா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில் குழந்தையின் இடுப்புப் பகுதியில் காயங்கள், வீங்கிய வயிறு மற்றும் ஆசனவாய் பகுதியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
ஜூலை 18 அன்று தந்தையைக் முதன்மைச் சந்தேக நபராகக் கைது செய்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் காவல் துறை கொலை வழக்காக வகைப்படுத்தியது.
இவ்வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், டி.என்.ஏ, நோயியல் மற்றும் தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க அக்டோபர் 1-ஆம் தேதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தனது கைபேசியில் ஆபாசப் பொருட்களை வைத்திருக்க முயன்ற குற்றத்திற்காக தேவேந்திரனுக்கு RM3,000 அபராதமும் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் A. ஷார்மிணி உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 18 அன்று மதியம் 1:00 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் இக்குற்றம் நடந்ததாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 29(a)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எதிரி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இத்தண்டனை வழங்கப்பட்டது.






















