டெஸ்லா தயாரிப்பு கார்களை உளவு பார்க்க பயன்படுத்தினால் நிறுவனத்தையே மூடி விடுவேன்

-அமெரிக்காவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

பீஜிங்:
‘எனது நிறுவனத்தின் கார்களை உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தினால், டெஸ்லா கார் நிறுவனத்தையே மூடி விடுவேன்,’ என்று  எலான் மாஸ்க் எச்சரித்துள்ளார். இறக்குமதி வரி விதிப்பு, அண்டை நாடுகளை அச்சுறுத்துவது, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அமெரிக்கா – சீனா இடையிலான மோதல் அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த வரையில், இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. தற்போது, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகி இருக்கிறார். 

அவரும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பிடியை தளர்த்தவில்லை. இருப்பினும், பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2 நாட்களாக அமெரிக்காவின் அலஸ்காவில் இருநாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பு கார்கள், தனது நாட்டில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக சீனா குற்றம்சாட்டியது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானதுதான் டெஸ்லா கார் நிறுவனம். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி பயண நிறுவனத்தின் உரிமையாளராகவும் இவர் இருக்கிறார். தனது தயாரிப்பு கார் மீது சீனா கூறியுள்ள குற்றச்சாட்டால் எலான் மஸ்க் அதிருப்தி அடைந்துள்ளார். இது பற்றி நேற்று அவர் கூறுகையில், ‘சீனா உள்ளிட்ட உலக நாடுகள் எதிலும், டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் உளவு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

அப்படி செய்தால், அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தையே மூடி விடுவேன்,’ என எச்சரித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் மிகவும் அதிநவீன கேமராக்களும், சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. உலகின் வேறு எந்த கார்களிலும் இவ்வளவு அதிநவீன கேமராக்கள், சென்சார் கருவிகள் கிடையாது.

எனவே, இந்த கார்களை தனது நாட்டு ராணுவ பகுதிகள், ராணுவ குடியிருப்புகள் மற்றும் இதர பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் உள்ள பகுதிகளுக்குள் எடுத்து செல்வதற்கு சீனா சமீபத்தில் தடை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here