உலகளவில் முடங்கியது Facebook, Instagram: அவதிக்குள்ளான மில்லியன் கணக்கான பயனர்கள்!

கோலாலம்பூர்:

சமூக ஊடக நிறுவனமான meta-வுக்குச் சொந்தமான முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) தளங்கள் இன்று திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகளவில் முடங்கியதால் பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இணையத்தளங்களின் முடக்கத்தைக் கண்காணிக்கும் ‘டவுன்டெக்டர்’ (Downdetector) அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்க நேரப்படி இன்று காலை முதல் முகநூல் செயலிழப்பு குறித்து சுமார் 4,800-க்கும் மேற்பட்ட புகார்களும், இன்ஸ்டாகிராம் குறித்து சுமார் 2,800-க்கும் மேற்பட்ட புகார்களும் குறுகிய காலத்தில் பதிவாகின. இதில் 63 விழுக்காட்டினர் இணையத்தள பக்கங்களை அணுகுவதில் சிக்கலை எதிர்கொண்டனர்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் இத்தளங்களின் சேவை சீரற்று, அவ்வப்போது துண்டிக்கப்படுவதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல்களைப் பயனர்கள் ‘X’ (முன்னாள் டிவிட்டர்) மற்றும் meta-வின் ‘த்ரெட்ஸ்’ (Threads) தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முகநூலை அணுக முயலும்போது, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உங்கள் கணக்கை தற்போது பயன்படுத்த முடியாது. இது விரைவில் சரிசெய்யப்படும்” என்ற கணினி அறிவிப்பு (Disruption notice) திரையில் தோன்றுவதாகப் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த பயனர் ஒருவர், இன்று மாலை 3.56 மணியளவில் (மலேசிய நேரம்) முகநூல் முடங்கியதை எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சில பயனர்கள் கணினிகள் (Computers) வழியாக முகநூலை அணுகும்போது மட்டுமே இந்தத் தடை ஏற்படுவதாகவும், ஸ்மார்ட்போன்களில் செயலி வழக்கம் போலச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணி கடந்தும், இந்த திடீர் முடக்கத்திற்கான காரணம் குறித்தோ அல்லது சேவைகள் எப்போது முழுமையாகச் சீரடையும் என்பது குறித்தோ meta நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here